80-வது சுதந்திர தினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.

80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நமது இந்தியத் திருநாடு 80ஆவது விடுதலைத் திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய பொழுதில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுதந்திர தின புரட்சிகர நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

‘தண்ணீர்விட்டோ வளர்த்தோம்? இப்பயிரை கண்ணீராற் காத்தோம்’ என்ற மகாகவியின் பாட்டு வரிகளுக்கேற்ப நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தோர், சிறைக்கொட்டடியையும், சித்ரவதைகளையும் இன்முகத்தோடு எதிர்கொண்ட தியாகிகள் அனைவருக்கும் வீரவணக்கத்தை உரித்தாக்குகிறோம்.

விடுதலைக்கான நெடிய போராட்டத்தில் முழு விடுதலை என முதலில் முழங்கியவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்தியாவின் ஒருமைப்பாடும், பன்முகத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் மொழிவழி மாநிலங்களே தீர்வு என முன்பின் முரணின்றி முன்மொழிந்தது கம்யூனிஸ்ட் இயக்கம்.

விடுதலைப் போரில் வீரம் செறிந்த பங்களிப்பை செய்த கம்யூனிஸ்டுகள், சுதந்திரப் போராட்டத்தோடு மண்ணுரிமை, பெண்ணுரிமை, தொழிலாளர் வர்க்க உரிமைகள், தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான போராட்டம், சமூக நீதி, சம நீதி போன்றவற்றை இணைத்தவர்கள் கம்யூனிஸ்டுகள்.

விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகி நின்ற மத வெறி சக்திகளின் வாரிசுகளிடம் ஒன்றிய மற்றும் பல மாநிலங்களின் ஆட்சி அதிகாரம் சிக்கிக்கொண்டுள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத இந்த கூட்டம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை திட்டமிட்டு சிதைத்து வருகிறது. அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களும் அழிக்கப்படுகின்றன.

பொதுத்துறை நிறுவனங்கள், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கைமாற்றி தரப்படுகிறது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி விடுதலை பெற்ற நமது நாட்டின் சுயேட்சையான அயல்துறை கொள்கை கைகழுவப்பட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடிபணிவதாக அயல்துறை கொள்கை மாற்றப்பட்டுள்ளது.

உப்பு சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்கள் அன்று நம் முன்னோர்கள். இன்று விவசாயிகளின் விதை உரிமையைக் கூட பன்னாட்டு நிறுவனங்களிடம் அடகு வைக்கிறது மோடி அரசு. வேலையின்மை, வறுமை, தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளுக்கு முடிவு காணப்படவில்லை. தேசத்தின் சரிபாதியாக உள்ள பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வரைவை முடக்க மோடி அரசு சதி செய்கிறது.

ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி போன்ற விழுமியங்களை கொண்ட அரசியல் சட்டத்தை பாதுகாக்க விடுதலை நாளில் உறுதியேற்போம்.

போராட்டங்களின் வழியாகவே சாதிக்க முடியும் என்பதற்கு சமீபத்திய சாட்சியமாக தில்லி துவங்கி நாடு முழுவதும் நடந்த இளைஞர் – மாணவர் போராட்டம் திகழ்கிறது. விடுதலைப் போராட்ட தியாகிகளின் கனவுகளை நனவாக்கவும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற சமத்துவ சமூகத்தை உருவாக்கிடவும் விடுதலை நாளில் உறுதியேற்போம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.