வீராணம் ஏரி திறக்கப்பட்டதை அடுத்து கடலூர் மாவட்டம் குமராட்சியில் 720 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மக்களின்
இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. நீர் நிலைகளுக்கு வழக்கத்துக்கு மாறாக, அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. ஆறுகள், ஏரிகள், அணைகள் நிரம்பி
வழிகின்றன. பல பகுதிகளில் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (21.11.2021) சென்னையில் “தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்ன, தண்ணீர் தேங்காமல் இருக்க தீர்வு என்ன?” என நியூஸ் 7 தமிழ் தொடர் நேரலையை, வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 10 மணி முதல் வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து கள ஆய்வு மேற்கொண்டு மக்கள் சொல்லும் பாதிப்புகளையும், தீர்வுகளையும் தொடர் நேரலையாக ஒளிபரப்பு செய்து வருகிறது நியூஸ் 7 தமிழ்.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் குமராட்சி பகுதியில், 720 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை 1720 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. குமராட்சி பகுதியில் மட்டும் வீராணம் ஏரி திறக்கப்பட்டதால் 720 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளது. இதுபற்றி அந்தப் பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘ஒவ்வொரு வருஷமும் இந்தப் பிரச்னையை சந்திக்கிறோம். எங்களுக்கு விவசாயம்தான் வாழ்க்கை. வேறு பிழைப்பு இல்லை. ஒவ்வொரு வருஷமும் இந்த பிரச்னையால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். சுமார் 25 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில் இருக்கிற சர்வராஜன் பேட்டை, திருநாரையூர் உட்பட 8 கிராமங்கள் தாழ்வான பகுதி என்பதால் அதிக பாதிப்புகள் சந்திக்கிறோம். இந்தப் பகுதியில் கரையை பலப்படுத்த வேண்டும், வடிகால்களை தூர்வார வேண்டும். அதை பண்ணினால் மட்டும்தான் நிரந்தர தீர்வாக இருக்கும். பயிர் காப்பீட்டு தொகையையும் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.