திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் இந்திரா காலனி உள்ளது. நேற்று இரவு இப்பகுதிக்கு மதுபோதையில் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, திடீரென பெட்ரோல் குண்டை வீசியது. மேலும் சாலையில் கண்ணில் தென்பட்டவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டி தாக்கியது.
மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் மாற்றுத்திறனாளி உள்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேய உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 14 தனிப்படை அமைத்து காவல்துறை மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஏழு பேரின் முகமூடியுடன் கூடிய புகைப்படங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.








