அதிமுகவை சேர்ந்த சிவகங்கை மாவட்ட சேர்மன் மகளின் திருமண வரவேற்பு விழாவிற்கு ஊர் மக்கள் திரண்டு ஊர்வரமாக சென்று 504 கிடாக்கள், 200 சீர் தட்டுகள், ஆள் உயர குத்துவிளக்கு என்று சீர்வரிசை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் பொன்னடப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன். மணி பாஸ்கரன். அதிமுகவை சேர்ந்த இவர், மாவட்ட சேர்மனாகவும், சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளராகவும் உள்ளார். கொரோனா காலத்தில் அப்பகுதி மக்களுக்கு தனது உயிரையும் பொருட்படுத்தாமல் வீடு வீடாக சென்று அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.
இதனால் மக்களின் மனதில் இடம் பிடித்த பொன். மணி பாஸ்கரன் மகளின் திருமணம் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், அதனுடைய திருமண வரவேற்பு விழா குன்னத்தூர் அருகே ஓவிஎம் கார்டனில் நடைபெற்றது. வரவேற்பு விழாவை அசத்தும் வகையில் சீர் செய்ய முடிவு செய்த எஸ்.புதூர் ஒன்றிய மக்கள், 504 கிடாக்கள், ஆளுயுர குத்துவிளக்குகள், தாமிர பானைகள், சேலைகள் போன்ற சீர்வரிசை பொருட்களை மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்து அளித்தனர்.
சீர்வரிசை பொருட்கள் கொண்டு சென்ற மக்கள் அனைவரையும் பொன். மணி பாஸ்கரன் மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றி கூறி கைகூப்பி வரவேற்றனர். எஸ்.புதூர் ஒன்றிய மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்த இந்த சீர்வரிசை ஊர்வலம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
- பி. ஜேம்ஸ் லிசா









