தேர்தல் பரப்புரையின் போது முதல்வரை அவதூறாக பேசியதை அடுத்து, இரண்டு நாட்களுக்கு ஆ. ராசா தேர்தல் பரப்புரையில் ஈடுபட தடைவிதித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அவரை நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் விடுவித்துள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்து ஆ. ராசா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 26 ஆம் தேதி, ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போது முதல்வர் பழனிசாமியை குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதைத்தொடர்ந்து அதிகவினர் தமிழக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர். இதற்கிடையில், முதல்வரைப்பற்றி ஆ. ராசா பேசியதற்கு அவர் சார்பில் மனிப்பு கோரப்பட்டது. மேலும் இதுதொடர்பாக விளக்கம் கேட்டு ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் ஆ . ராசா அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்த இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதால் அடுத்த 48 மணி நேரத்திற்கு அவர் பரப்புரையில் ஈடுபட தடைவிதித்துள்ளது. மேலும் அவர் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இனி வரும் காலங்களில் பெண்களின் மாண்பை குலைக்கும் வகையில் அவர் கருத்துகளை தெரிவிக்ககூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் தடையை எதிர்த்து ஆ. ராசா சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். தேர்தல் நெருங்குவதால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க இயலாது என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.







