திண்டிவனத்தில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை, பணம், மற்றும் ஹார்ட் டிஸ்க்கையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள சாய்லட்சுமி நகரில் வசித்து வருபவர் குமார். இவர் கருவம்பாக்கம் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி லதா விழுக்கம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இன்று வழக்கம் போல கணவன், மனைவி இருவரும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, இருவரும் அவர்களது பள்ளிக்குச் சென்ற நிலையில், மாலை ஐந்து மணியளவில் வீட்டிற்கு திரும்பிய லதா, வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 40 சவரன் நகை, கால்கிலோ வெள்ளி, பத்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் கொள்ளை நடந்த வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் மற்றும், மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவான ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ரோசனை காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.







