மதுரை ஏவி மேம்பாலத்தில் இஸ்ரேல் மற்றும் இந்திய தேசியக்கொடி அச்சிட்ட பேனரை பறக்க விட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாநகர் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள ஏவி மேம்பாலத்தில் 4 இளைஞர்கள் இஸ்ரேல் மற்றும் இந்திய தேசியக் கொடிகள் அச்சிடப்பட்ட பேனரை பறக்க விட்டனர். அதில் INDIA STAND WITH ISRAEL என்ற வாசகத்துடன், இருநாடுகளும் கைகுலுக்குவது போன்ற படம் இருந்தது. உடன் பாரத் மாதா கி ஜே, ஜெய்ஸ்ரீராம், இந்தியா இந்து நாடு என்ற கோஷங்களை முழக்கமிட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் 4 பேரையும் மதிச்சியம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த சரத்குமார், கடச்சனேந்தல் பகுதியை சேர்ந்த ரகுபதி என்ற நேதாஜி, புதூரை சேர்ந்த பிரவீன்ராஜ், திடீர்நகர் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பதும், அதில் இருவர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து நான்கு பேரையும் கைது செய்த மதிச்சியம் காவல்துறையினர் அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.







