இந்த கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் முதலில் மகளிர் தின வாழ்த்துகள். நீங்கள் ஆணாக இருப்பினும் சரி.. உங்களையும் உள்ளடக்கியது தான் இந்த தினம்.. எனவே மீண்டும் சொல்கிறேன்.. மகளிர் தின வாழ்த்துக்கள்!
இப்போது தலைப்புக்குள் வருவோம்.. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு நிகழ்வில் உரையாற்றிய ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா பெண்கள் அமைப்பின் சமீபத்திய மதிப்பீடுகளின் படி, பாலின சமத்துவம் என்பது 300 ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்னும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உண்மையில் இந்த தகவல் புதியது அல்ல.. கடந்த வருடம் ஐ.நா சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals) குறித்து வெளியிடப்பட்ட ‘தி ஜெண்டர்
ஸ்நாப்ஷாட் 2022’ அறிக்கையில், தற்போதைய பெண்கள் முன்னேற்ற விகிதத்தின் படி, உலகளவில் பாலின சமத்துவம் அடைய கிட்டத்தட்ட 286 வருடங்கள் ஆகலாம் என ஏற்கனேவே வெளியிட்டிருந்தது.
நிலையான வளர்ச்சி இலக்குகள் என்பது 2030ஆம் ஆண்டுக்குள் மக்களின் அமைதி,
ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு உறுதி செய்தல் போன்ற 17 குறிக்கோள்களோடு ஐ.நா சபையால் 2015ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தி ஜெண்டர் ஸ்நாப்ஷாட் அறிக்கை 2022
இந்த எஸ்.டி.ஜி-களில் பெண்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து ஐ.நா பொருளாதார மற்றும் சமூக நலத்துறை நடத்திய ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எஸ்.டி.ஜியில் 5ஆம் இலக்கான 2030க்குள் பாலின சமத்துவம் என்பதெல்லாம், கொரானா பெருந்தொற்றாலும், உலகளவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் மற்றும் அவர்களின் இனபெருக்க நலனில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளாலும், கால நிலை மாற்றங்களாலும் சிறிதளவும் சாத்தியப்பட வாய்ப்பிலை என தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின் முக்கிய புள்ளி விவரங்களை காண்போம்:
1. 38 கோடி பெண்கள் அதீத வறுமையில் உள்ளனர். அவர்களின் ஒரு நாள்
சம்பளம் ரூ.156க்கும் குறைவாக உள்ளது.
2. 3ல் 1 பெண் சராசரி அல்லது அதிக அளவிலான உணவு பாதுகாப்பின்மையின்
பிடியில் சிக்கியுள்ளனர்.
3. சில நாடுகளில் வாழும் 120 கோடி பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்கு
அதிக கட்டுப்பாடுகளும், 10.2 கோடி பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்கு
தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
4. 15-49 வயதுடையவர்களில், 10ல் 1 பெண் அவரது கணவர் அல்லது காதலரால்
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்.
5. நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், அதிகாரம் மற்றும் தலைமைப்
பதவிகளில் சம பிரதிநிதித்துவம் அடைய 140 ஆண்டுகளும், தேசிய
நாடாளுமன்றங்களில் பெண்கள் சம பிரதிநிதித்துவம் அடைய குறைந்தபட்சம்
40 ஆண்டுகளும் ஆகலாம்.
6. ஒவ்வொரு வருடமும் சுத்தமான குடிநீர் பற்றாக்குறையால் 8 லட்சத்திற்கும்
அதிகமான பெண்கள் உயிரிழக்கின்றனர்.
7. நீதித்துறை பதவிகளில் பெண்களின் பங்களிப்பு 42% ஆகும். காவல்துறை
பதவிகளில் பெண்களில் பங்களிப்பு வெறும் 16% ஆக உள்ளது.
க்ளோபல் ஜெண்டர் கேப் அறிக்கை 2022
இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் உலகளவில் இருப்பதால், இந்தியா உட்பட 146 நாடுகளின் பாலின சமத்துவ தரவரிசையை வெளியிட்ட உலக பொருளாதார மன்றத்தின் அறிக்கையை படிக்க நேர்ந்தது. அந்த அறிக்கையும் மேலும் கவலை அளிக்கக்கூடிய விவரங்களையே தெரிவிக்கிறது. இந்த உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2022-ல், மொத்தம் உள்ள 146 நாடுகளில், 0.629 புள்ளிகளுடன் இந்தியா 135 வது இடத்தையே பிடித்துள்ளது. அண்டை நாடுகளான நேபால், இலங்கை, தாய்லாந்து கூட இந்தியாவை விட
பல இடங்கள் முன்னிலையில் உள்ளன. 0.908 புள்ளிகளுடன் ஐஸ்லாந்து முதலிடத்திலும், 0.435 புள்ளிகளுடன் 146வது இடத்தில் ஆப்கானிஸ்தானும் உள்ளது.
இந்த பாலின சமத்துவ இடைவெளி குறியீடு 4 முக்கிய காரணிகள் கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா பெண்களுக்கான பொருளாதார பங்கேற்பு மற்றும் வாய்ப்புகளில் 0.350 புள்ளிகளுடன் 143வது இடத்திலும், கல்வி அடைதல் குறியீட்டில் 0.961 புள்ளிகளுடன் 107வது இடத்திலும், ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்தலில் 0.937 புள்ளிகளுடன் 146வது இடத்திலும் மற்றும் அரசியல் அதிகாரமளித்தலில் 0.267 புள்ளிகளுடன் 48வது இடத்திலும் உள்ளது.
இந்த அறிக்கைகள் உலக மற்றும் இந்திய அளவில் பிரிக்கப்பட்டாலும், பல பின்தங்கிய மற்றும் நெருக்கடி அதிகம் உள்ள நாடுகளில் பெண்களின் நிலை பெரும் பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு துன்பங்களும் துயரங்களும் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கின்றன. விவாகரத்து பெற்ற பெண்களை மீண்டும் முன்னாள் கணவர்களிடமே வலுக்கட்டாயமாக அனுப்பி வரும் தலிபான் அரசு, நாக்பூரில் யூடியூப் பார்த்து சுயபிரசவம் செய்து கொண்ட 15 வயது சிறுமி, நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வைத்த கணவன் போன்றவை ஒரு சில உதாரணங்களே!
ஐ.நா பெண்கள் அமைப்பின் நிர்வாக இயக்குநர் சிமா பஹோஸ், பெண்கள் மற்றும் சிறுமிகளின் நலன் மற்றும் முன்னேற்றத்தில் உடனடியாக அரசுகள் முதலீடு செய்யாவிட்டால், தற்போதைய நிலை மிகவும் மோசமடைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். பள்ளிப்படிப்பின் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெண்ணின் எதிர்கால வருவாயை 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், பெண்களின் முன்னேற்றம் என்பது அவர்களுக்கான கல்வியை சரிவர அளிப்பதில் தான் தொடங்குகிறது என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுவோம்.