உலக சினிமாவில் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் மிகப்பெரிய விழவாக நடத்தபட்டு , தகுதியான படங்களை தேர்வு செய்து அதற்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான 95-வது ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் 12 -ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.
இந்த முறை எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் ,ஜுனியர் என்டிஆர் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு ‘ பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவின் இறுதி
பட்டியலில் தேர்வாகி, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்தியாவின் தலைநகர் டெல்லியின் பின்னணியில் எடுக்கப்பட்ட ”ஆல் தட் பிரீத்ஸ்” என்கிற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படங்களுக்கான பிரிவிலும், தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட இரு பழங்குடிகளைப் பற்றிய ஆவணப்படமான ”தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்” படம் ஆவணக் குறும்படப் பிரிவிலும் போட்டியிடுகிறது.
பொதுவாகவே ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்கும் படங்களுக்கு ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்கள் வாக்களித்து, அதில் அதிக அளவு வாக்குகளை பெறும் படங்களுக்கு தான் விருதுகள் வழங்கப்படும். அப்படி உலகம் முழுவதும் சுமார் 4,000-க்கும் அதிகமான ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்கள் உள்ள நிலையில், இந்த ஆண்டு ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் குறிப்பாக இந்தியா சார்பில் நடிகர் சூர்யா, கஜோல் மற்றும் இந்தி இயக்குநர் ரீமா காக்டி ஆகியோர் ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவின் புதிய உறுப்பினர்களாக சேர அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பை ஏற்ற சூர்யா, இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகளுக்கான கமிட்டி உறுப்பினராக இணைந்தார். ஏற்கனவே நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணையும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையையும் இதன் மூலம் பெற்றார். விரைவில் கடந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட உள்ள சூழலில்… நடிகர் சூர்யா
ஆஸ்கர் கமிட்டி உறுப்பினராக தனது வாக்கினை இன்று பதிவு செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ஸ்க்ரீன்ஷாட்டாக பகிர, அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
https://twitter.com/Suriya_offl/status/1633395607091150849?s=20
- பி.ஜேம்ஸ் லிசா








