ஒட்டன்சத்திரத்தில் பிரபல மருத்துவரின் குடும்பத்தை கட்டிப்போட்டு 280 சவரன் நகைகள், 25 லட்சம் ரூபாய், கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நாகனம்பட்டி புறவழிச்சாலையில் மருத்துவர் சக்திவேல் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று அதிகாலை அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், மருத்துவர் சக்திவேல் மற்றும் அவருடைய மனைவி மற்றும் தாய் தந்தையைக் கட்டிப்போட்டு, வீட்டில் இருந்த 280 சவரன் தங்க நகைகள் மற்றும் 25 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
மேலும், வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் எடுத்துக்கொண்டு தப்பினர். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை கொண்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட இனோவா காரினை கொடைரோடு அருகே மதுரை – திண்டுக்கல் 4 வழிச்சாலையில் நிறுத்திவிட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் தனிப்படையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







