திருச்செந்தூர் – நெல்லை மார்க்கத்தில் நடுவழியில் நிற்கும் 25 பேருந்துகள் – பயணிகளுக்கு உதவும் கிராம மக்கள்!

திருச்செந்தூர் முதல் திருநெல்வேலி செல்லும் மார்க்கத்தில், சுமார் 25க்கும் மேற்பட்ட பேருந்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு, உள்ளூர் மக்கள் உணவு வழங்கி பாதுகாப்பு அளித்து வருகின்றனர். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…

திருச்செந்தூர் முதல் திருநெல்வேலி செல்லும் மார்க்கத்தில், சுமார் 25க்கும் மேற்பட்ட பேருந்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு, உள்ளூர் மக்கள் உணவு வழங்கி பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லக்கூடிய பிரதான சாலை முழுவதுமாக வெள்ளநீரில் சூழப்பட்டுள்ளது. அங்கு மக்கள் ஜேசிபி வாகனத்தில் மீட்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் வெள்ளநீர் தேங்கி இருப்பதால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்றாலும் அனைத்து மக்களுக்கும் இன்னும் உதவிகள் சென்று சேராத நிலையே நீடிக்கிறது. 

இந்நிலையில் திருச்செந்தூர் முதல் திருநெல்வேலி செல்லும் மார்க்கத்தில் உள்ள தென் திருப்பேரை அருகே மணத்தி கிராமத்துக்கு அருகில் சுமார் 25க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகள் நிற்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த பேருந்தில் பயணித்து வந்த பயணிகளுக்கு உள்ளூர் மக்கள் உணவு வழங்கி பாதுகாப்பு அளித்துவருகின்றனர். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.