சென்னை எழும்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 20 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை எழும்பூர் லங்ஸ் கார்டன் ரவுண்டானா பகுதியில் இன்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஆட்டோவை போலீசார் சோதனை செய்தனர். அதில் 13 பார்சல்களில் 20 கிலோ தங்கம் இருப்பதை கண்ட போலீசார், ஆட்டோவில் இருந்தவர்களிடம் விசாரணையில் செய்தனர்.
உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 20 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார் ஆட்டோவில் வந்த பரத் லால், ராகுல் ஆகிய இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் இருவரும் சென்னை சவுகார்பேட்டையில் வசித்து, அங்கு உள்ள கொரியர் அலுவலகத்தில் பணியாற்றி வருவது தெரிய வந்தது.

தொடர் விசாரணையில் சூரத்தில் இருந்து தங்கத்தை வாங்கி அங்கிருந்து மும்பை சென்று பின் விமானம் மூலமாக சென்னை வந்து பின்னர் ஆட்டோவில் தங்கத்தை சவுகார்பேட்டைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் கொண்டு வரப்பட்ட தங்க நகைகள் யாருக்கு சொந்தமான நகைகள் என்பது குறித்து எழும்பூர் போலீசார் தீவீர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அ. மாரித்தங்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: