இங்கிலாந்து ராணி எலிசபெத் லண்டனில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிப்பட்ட நினைவலைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இங்கிலாந்தின் ராணியாக 70 ஆண்டு காலம் அரியணையை அலங்கரித்தவர் இரண்டாம் எலிசபெத். இவர் அவரது அரண்மனையிலிருக்கும் போது கூட தனது காலணிகளை அகற்றியதில்லை. இந்நிலையில் அண்மையில் வட லண்டனில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்ற அவர் தனது காலணிகளை கழற்றிவிட்டு கோயிலில் தரிசனம் செய்துள்ள செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராணி எலிசபெத் கோல்டன் ஜூபிலி சுற்றுப்பயணத்தின் போது அவர் பல்வேறு இடங்களுக்கு சென்றார். அப்போது அவர் லண்டனில் உள்ள ஒரு முருகன் கோவிலுக்கு சென்றார். அவர் இந்த முருகன் கோவிலுக்கு செல்வது இதுவே முதல் முறை. கோயிலுக்கு சென்ற ராணி எலிசபெத்தை பூசாரிகள் மாலை அணிவித்து வரவேற்றனர். அப்போது எலிசபெத் ராணி அந்த பூமாலையை தனது கைகளில் தாங்கியிருந்தது நமது இந்திய கலாச்சாரத்தை பிரதிபலித்தது.
பின்னர் இரண்டு பெண்கள் ராணி எலிசபெத்துக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று, பாதங்களுக்கு பூஜை செய்து, அவர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். அதன்பின் ராணி தனது காலணிகளை கழற்றி விட்டு கோயிலுக்குள் சென்று வழிபட்டார்.
இதுகுறித்து அந்த கோயில் அர்ச்சகர் கூறுகையில், எலிசபெத் ராணி இந்த முருகன் கோயிலுக்கு வருகை தந்தது இந்து மத நம்பிக்கைக்கு கிடைத்த அங்கீகாரம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும் கிடைத்த அங்கீகாரம் ஆகும். இதனால் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என்று தெரிவித்தார்.







