ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 1 கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டிருப்பதாக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி சமயபுரத்தை அடுத்த எம்.ஆர் பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளை தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பார்வையிட்டார். யானைகள் மறுவாழ்வு மையத்தில் எப்படி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனை அடுத்து புதிதாக உருவாக்கப்பட உள்ள வன உயிரியல் பூங்கா அமைவிடத்தை அமைச்சர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், துறையூர் சோபனபுரம் பகுதியில் நாற்றாங்கால்களை ஆய்வு செய்தோம். திருச்சிக்கு வன விலங்குகள் பூங்கா கொண்டு வர எல்லா ஏற்பாடுகளும் எம்.ஆர். பாளையத்தில் செய்து வருகிறோம். 2009ல் துவக்கி படிப்படியாக இங்கு வன உயிரியல் பூங்கா கொண்டு வர வேலை நடந்து வருகிறது. தற்போது 12 கோடியே 26 லட்சம் நிதி மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.
2012ம் ஆண்டு எம்.ஆர். பாளையத்தில் உள்ள வன உயிரியல் பூங்காவில் 5.4 கிலோ மீட்டர் சுற்றுச்சுவர் 85 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வன உயிரியல் பூங்காவை மேலும் மேம்படுத்த மத்திய விலங்கு காட்சியாக ஆணையத்திடம் நிதி கேட்டுள்ளோம். இதில் தமிழக அரசு 3 கோடி பணம் வழங்கி சில கட்டிடங்களை கட்டி உள்ளோம். விலங்குகளை கொண்டு வர ஒப்புதல் மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் சம தர்ம ஆட்சி நடந்து வருகிறது. மக்களே எதிர்பார்க்காத பல திட்டங்களை முதலமைச்சர் கொடுத்துள்ளார். மக்களுக்கு ஆரோக்கியம் தருவது வனத்துறை தான். மரங்கள் வாயிலாக தான் நமக்கு நல்ல காற்று கிடைக்கிறது. தற்போது தமிழகத்தில் 24% நமக்கு மரங்கள் உள்ளது. இதை 33% மரங்கள் நிறைந்த இடமாக தமிழகத்தை மாற்ற இலக்கு என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 2.5 கோடி மரங்களை நாங்கள் இந்த ஆண்டு நட உள்ளோம். ஒரு மாவட்டத்தில் குறைந்தது 1 கோடி மரங்கள் நட திட்டம். பச்சை மலையில் மலை பாதை வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. மலை வாழ் மக்கள் மேம்பாட்டு நலன் துறை தற்போது நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளனர். விரைவில் சோபனாபுரம் முதல் பச்சை மலை வரை 25 கி.மீ சாலை அமைக்க வழிவகை செய்வோம். இந்த சாலையை அமைக்க மலைவாழ் மக்களுக்கான மேம்பாட்டு நலன் துறை, மாநில நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் கோப்புகள் அனுப்பி உள்ளோம்.







