புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்றான நாடாளுமன்றம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் விஸ்டா என்ற புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 டிசம்பரில் அடிக்கல் நாட்டினார். சுமார் 1200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டத்தின் பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், இதன் திறப்பு விழா வரும் 28-ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு நடப்பதாகவும், பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் நாட்டின் குடியரசுத்தலைவர் தான் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றன.
வரும் 28-ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி. டெரிக் ஓ பிரைனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் அறிவித்துள்ளன.
இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை திமுகவும் புறக்கணிப்பதாக அக் கட்சியின் எம்பி திருச்சி சிவா அறிவித்துள்ளார். இதே போல், விடுதலை சிறுத்தைகள் , ஆம் ஆத்மி கட்சி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
தொடர்ந்து அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி, ஜார்க்கண்ட்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (மணி), உமர் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியும் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.







