கள்ளக்குறிச்சி மாவட்டம், சேஷ சமுத்திரம் கிராமத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 144 தடை உத்தரவு நீக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சேசசமுத்திரம் என்ற
கிராமத்தில் 2015 ஆகஸ்டு 15 அன்று கோவில் தேர் ஊர்வலம் தொடர்பான தகராறில் 500 ஆதிக்க சாதியினர் பட்டியல் சமூக மக்களின் குடியிருப்பை தாக்கியுள்ளனர். இதனையடுத்து அன்று நடக்க இருந்த தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட வன்முறையின் போது 15 பட்டியலின மக்களின் வீடுகள் எரிக்கப்பட்டன மற்றும் 40 பேர் காயமடைந்தனர்.
இந்த வன்முறையின் எதிரொலியாக அக்கிராமத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அக்கிராமத்தில் கூட்டம் கூடுவதோ பொது நிகழ்ச்சி நடத்துவதோ இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி தலைவர் ஷ்ரவன் குமார் முயற்சியால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதே நாளான ஆகஸ்டு 15 நேற்று 144 தடை உத்தரவு நீக்கபட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
சுமார் 8 ஆண்டுகளாக எந்தவித பொது நிகழ்ச்சி நடக்காமல் இருந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் மீண்டும் தேர் திருவிழா நடத்தபடும் என உறுதியளித்து சென்றார்.மேலும் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் கூறுகையில் ஜாதி ,மதம் ,இனம் பாராமல் மக்கள் அனைவரும் அனைவருக்கும் சமம் என்றும் சகோதரத்துடன் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் எனவும் நாம் ஒற்றுமையை பேணி காப்பதால் மட்டுமே கிராமம் வளர்ச்சி பெறும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஒரு கிராமம் வளர்ச்சி பெருமாயின் மாவட்டமும் வளர்ச்சி பெறும் எனவும் ,மாவட்டம் வளர்ச்சி பெற்றால் நாடு வளர்ச்சி பெறும் எனவும் இப்படிபட்ட வளர்ச்சி என்பது மக்கள் கையில் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். அரசும் அரசு அதிகாரிகளும் மக்களுக்கானவர்கள் என்பதை உணர்ந்து வன்முறைகளை கையாள கூடாது என அவர் கேட்டுக் கொண்டார். மாவட்ட ஆட்சியரின் இந்த முயற்சியால் அக்கிராம மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.







