ஆடி அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரம், பாபநாசம் உள்ளிட்ட நீர்நிலைகளில் திரண்ட ஏராளமான பக்தர்கள் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களின் அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசையன்று முன்னோர்க்கு ‘ பிதுர் கடன் கொடுத்தால் அது அவர்களை நேரடியாக சென்றடையும் என்பதும் நம்பிக்கை.
அந்த வகையில் ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் மிகுந்த சிறப்பு வாய்ந்தவை. அதன்படி இந்த ஆடி மாதம் 2 அமாவாசை உள்ளது. அதில் ஆடி 1 அதாவது ஜூலை 17-ம் தேதி முதல் அமாவாசை வந்தது. இந்நிலையில் இரண்டாவது அமாவாசை இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதனையடுத்து சூரிய உதயத்திற்கு முன்பே கடற்கரை, மகாநதிகள், ஆறுகள், குளங்களில் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
இராமேஸ்வரத்தில் குவிந்த பல்லாயிரக்கணக்காண பக்தர்கள், தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடலில் திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இதேபோல், நெல்லை பாபநாசம் தாமிரபரணி நதிக்கரையில் திரண்ட பொதுமக்கள் அங்கு நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான இந்துக்கள் தங்கள் மூதாதையர்களை நினைத்து கடலில் குளித்து பலிகர்மம் செய்து தர்ப்பனத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இதேபோல் குற்றாலம், பவானி கூடுதுறை, உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனயடுத்து
மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 2000 ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.







