உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவுபெறுவதை ஒட்டி, உதகை அல்ட்ரா 2023 என்ற 30 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டு தனது 140 – வது மாரத்தான் ஓட்டத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேற்கொண்டார்.
உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவுபெறுவதை ஒட்டி, நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழ்நாடு சுற்றுலா துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை ஒன்றிணைந்து ஊட்டி அல்ட்ரா 2023 என்ற தலைப்பில், மாரத்தான் போட்டிகளை நடத்தியது. உதகை படகு இல்லத்தில் இருந்து துவங்கிய இந்த போட்டியானது 15 கி.மீ, 30 கி.மீ, 60 கி.மீ, 90 கி.மீ ஆகிய நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவங்கிவைத்ததோடு, 30 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடினார். இது அவரது 140 – வது மாரத்தான் ஓட்டமாகும். இப்போட்டியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஊட்டி அல்ட்ரா என்ற அமைப்பு தொடர்ந்து பல ஆண்டு காலமாக இந்த மாரத்தான் போட்டியை நடத்தி வருகிறார்கள். அதன் மூலம் பல பிரச்சனைகளை முன்னிறுத்தி , அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் , பல்வேறு நிகழ்வுகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள் . அந்த வகையில் இந்த ஆண்டு ஒரு சிறு விளையாட்டு பூங்கா அமைப்பதற்கான திட்டத்தினை தொடங்கி வைப்பதற்காகவும் , உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவுபெறுவதை ஒட்டியும் , 90 கி.மீ , 60 கி.மீ , 30 கி.மீ , 15 கி.மீ , மாரத்தன் போட்டிகள் நடத்தப்பட்டது . இதில் நான் 30 கிலோ மீட்டர் மாரத்தன் போட்டியில் கலந்து கொண்டேன். இது தனது 140 – வது மாரத்தான் ஓட்டம் என தெரிவித்தார்.
இதையடுத்து, கொரோனா தொற்று குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர், இந்தியாவில் 50 க்கும் கீழே இருந்த தொற்று எண்ணிக்கையானது , தற்பொழுது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பொறுத்தவரை ஆக்சிஜன் வசதி , படுக்கை வசதி , மருந்து மாத்திரை வசதி ஆகியவை தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 1,000 படுக்கை வசதியுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது . அதேபோல் மேட்டுப்பாளையம் பகுதியில் 20 படுக்கை வசதிகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த XBB , BA2 வைரஸ் சிறிய பாதிப்பு ஏற்படுவதால் , பொதுமக்கள் எந்த பதற்றமும் அடைய வேண்டாம் என்றும் கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியார் அம்ரித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள், தனியார் சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா