14 மாவட்டங்களுக்கு செயலாளர்களை அறிவித்தார் இபிஎஸ் – திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளராக ஜெயசுதா நியமனம்.!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 14 மாவட்டங்களுக்கு புதிய  செயலாளர்களை அறிவித்துள்ளார். மேலும்  திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளராக ஜெயசுதா நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த…

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 14 மாவட்டங்களுக்கு புதிய  செயலாளர்களை அறிவித்துள்ளார். மேலும்  திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளராக ஜெயசுதா நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் நியமனம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி அதிமுக வில் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் அடிப்படையில்  கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், அதிமுக திருச்சி மாவட்ட செயலாளராக முன்னாள் துணை மேயர் சீனிவாசன், பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கும்பகோணம் மாநகர செயலாளராக ராமநாதன், தஞ்சை மாநகரச் செயலாளராக சரவணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல  திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, தஞ்சை உள்ளிட்ட சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளராக ஜெயசுதா நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் நீண்ட காலத்துக்கு பிறகு மாவட்ட செயலாளர் ஆக பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் நெல்லை மாவட்ட செயலாளராக வசந்தி முருகேசன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு பிறகு தற்போதுதான் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல நடிகை விந்தியாவுக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சார்பு அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.