மதுரையில் தேர்வுக்கு பயந்து பிளஸ் 2 மாணவன் தீக்குளித்துஉயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் புல்லமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணவர் சஞ்சய் (17). இவர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனது மாமா வீட்டில் சஞ்சய் தங்கி தேர்வுக்குப் படித்து வந்தார்.
இன்று காலை தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தபோது தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்துள்ளார்.
அப்போது அருகில் இருந்த அவரது மாமா காவல் துறையில் பணியாற்றி வரும் சார்பு ஆய்வாளர் ராஜபாண்டி என்பவர் சஞ்சயை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் தீ பட்டு படுகாயம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, இருவரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.








