வணிகர்களுக்கு தொந்தரவு கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி சமயபுரத்தில், வணிகர் சங்க பேரமைப்பின் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கொரோனா காலத்தில் நிதி வழங்கிய வணிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். வணிகர்களின் நலனை பாதுகாப்பதில் அக்கறை கொணட அரசாக திமுக அரசு செயல்படுவதாகக் கூறிய அவர், வணிக நிறுவனங்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பித்தால் போதும் என்றார்.
கொரோனா காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக, ஆளுங்கட்சி செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தது என தெரிவித்தார். திமுக ஆட்சியில்தான் வணிகர் நலவாரிய உறுப்பினர்களுக்கான நிதியுதவி அதிகரிக்கப்பட்டது எனக் கூறிய அவர், வணிகர்களுக்கு யாராவது தொந்தரவு கொடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும், வணிகர்களின் குடும்ப நல நிதி 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்
உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கடைகள் வாடகை பிரச்னை உள்ளிட்டவைகளை தீர்க்க கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும் என்ற முதலமைச்சர், “யார் யாரோ எதை எதையோ சொல்லி ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இது பெரியார் ஆட்சி, அண்ணா ஆட்சி, கருணாநிதி ஆட்சி. மொத்தத்தில் திராவிட மாடல் ஆட்சி. திட்டமிட்டு பரப்பப்படுகின்ற வதந்திகளுக்கு பதில் சொல்லி எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. ‘வசவாளர்கள் வாழ்க’ என்ற அண்ணாவின் வசனத்தையே அவர்களுக்கு பதிலாக அளிக்கிறேன்” என்றும் கூறினார்.







