தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 12 விநாயகர் கோயில்கள்

தமிழ்நாட்டில் உள்ள விநாயகர் கோயில்களில் புகழ் பெற்ற 12 விநாயகர் கோயில்கள் எங்கு உள்ளது. அதன் சிறப்பு என்ன என்பது குறித்த தொகுப்பை தற்போது பார்க்கலாம்.. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியில் உள்ள கற்பக…

தமிழ்நாட்டில் உள்ள விநாயகர் கோயில்களில் புகழ் பெற்ற 12 விநாயகர் கோயில்கள் எங்கு உள்ளது. அதன் சிறப்பு என்ன என்பது குறித்த தொகுப்பை தற்போது பார்க்கலாம்..

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியில் உள்ள கற்பக விநாயகர் :

இங்கு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று இரவு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் கோயில் உட் பிரகாரத்தில் வலம் வருவார். மேலும் திருக்கார்த்திகை அன்று விநாயகரும், சமேத சந்திரசேகர பெருமானும் திருவீதி பவனி வருவார். விநாயகர் சதுர்த்திக்கு 9 நாட்கள் முன்பு காப்புக்கட்டி கொடியேற்றம் நடக்கும். 10-ம் நாள் காலையில் தீர்த்தவாரி பூஜையும், ராட்சத கொழுக்கட்டை நெய்வேத்தியமும் சுவாமிக்கு படைக்கப்படும்.

 

கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள பிரசன்ன விநாயகர் :

இங்கு விநாயகர் பக்தனிடம் காணிக்கை தரும்படி வேண்டி கோயில் கொண்டுள்ளதாக வரலாறு கூறப்படும் நிலையில், சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஏகாதசி, ஆடிப்பெருக்கு, அனுமன் ஜெயந்தி திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, பங்குனி உத்திரம், மாசிமகம் உள்ளிட்ட நாட்களில் மூலவரான பிரசன்ன விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ராஜகணபதி விநாயகர் :

சங்கடஹர சதுர்த்தி, வளர்பிறை சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, பவுர்ணமி, அமாவாசை மற்றும் மார்கழி மாதம் 30 நாட்களும் இங்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த கோயிலில் அரசமரத்தடியில் அமர்ந்துள்ள ராஜ கணபதிக்கு இடது பக்கம் சிவபெருமானும், வலது பக்கம் கிருஷ்ண பெருமானும் உள்ளனர். மேலும் மேற்கூரையிலும் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளன. இவைகள் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த கோயிலுக்கு வருபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 

காஞ்சிபுரத்தில் உள்ள சங்குபாணி விநாயகர் :

சங்குபாணி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி மற்றும் சங்கடஹரசதுர்த்தி ஆகிய நாட்களில் மட்டுமே சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இங்குள்ள விநாயகர் கையில் சங்கை ஏந்தி சங்குபாணி விநாயகராக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த விநாயகரை பக்தர்கள் சிலர் சப்பாணி விநாயகர் என்றும் அழைப்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சி மகா பெரியவர் யாத்திரை கிளம்பும்போதும், யாத்திரை முடித்து திரும்பும் போதும், இந்த விநாயகருக்கு 108 தேங்காய் விடலை போடுவது வழக்கம் என வரலாறு சொல்கிறது.

 

புதுச்சேரி மணக்குள விநாயகர் :

விநாயகர் சதுர்த்தியன்றும், ஜனவரி முதல் தேதியன்றும் இந்த கோயிலில் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபட்டு செல்வார்கள். விநாயகர் தலங்களில் வேறு எங்கும் இல்லாத வகையில் பள்ளியறை இந்த கோயிலில் உள்ளது. இங்கு பள்ளியறையில் விநாயகருடன் உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியர் ஆவார். மூலவரான மணக்குள விநாயகர் கிணற்றின் மீது உள்ளார். இந்த குளத்தில் வற்றாத நீர் இருந்து கொண்டு இருப்பதாக பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

சேலம் ராஜகணபதி விநாயகர் :

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை, சதுர்த்தி நாளில் கணபதி யாகம், சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெறுகிறது. ஆவணியில் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். முதல் நாள் சதுர்த்தியன்று ராஜகணபதிக்கு தங்க கவசமும், 8-வது நாள் முத்தங்கி சேவையும் சிறப்பாக நடைபெறும். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுகின்றனர். இந்த விநாயகர் தினமும் ராஜ கோலத்தில் காட்சி தருவதால் இவருக்கு ராஜகணபதி என பெயர் வந்துள்ளது.

 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கரும்பாயிரம் விநாயகர் :

இந்த கோயிலில் விநாயகர் சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.கும்பகோணத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் கரும்பாயிரம் விநாயகர் மூத்த விநாயகராக உள்ளது இந்த கோயிலின் சிறப்பு. கும்பேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மறக்காமல் அருகில் உள்ள கரும்பாயிரம் விநாயகரையும் வழிபட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

திருச்சியில் உள்ள மலைக்கோட்டை உச்சி விநாயகர் :

விநாயகர் சதுர்த்தி, ஆங்கிலபுத்தாண்டு, தமிழ்புத்தாண்டு, பொங்கல் பண்டிகை காலத்தில் இந்த விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த கோயிலின் ஆயிரங்கால் மண்டபம் சிறப்பு வாய்ந்தது. 275 அடி உயரம் கொண்ட மலை மீது இந்த விநாயகர் அமர்ந்துள்ளார். கோயிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் ஏறி பக்தர்கள் உச்சி விநாயகரை வழிபடுகின்றனர். 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலில் அமைந்துள்ள தாயுமானவர் சன்னதி, தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் ஒன்று குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலியில் உள்ள உச்சிஷ்ட விநாயகர் :

உச்சிஷ்ட விநாயகரை மூலவராக கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே என்ற சிறப்பை பெற்றுள்ளது. 5 நிலை ராஜ கோபுரத்துடன் இந்த கோயில் அமைந்துள்ளது. ராஜ கோபுரத்தை கடந்ததும் நீண்ட வெட்ட வெளியை கடந்து விநாயகரை பார்க்க செல்ல வேண்டும். கருவறையில் உள்ள விநாயகர் ஒரு பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்து காமரூபராக காட்சியளிக்கிறார்.

 

திருவண்ணாமலையில் உள்ள இடுக்கு விநாயகர் :

சங்கடஹரசதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள கோயிலில் விநாயகர் நந்தி பெருமானுடன் இருப்பது சிறப்பு வாய்ந்தது. இங்கு மூலவர் விநாயகர் இல்லை என்பதும், மூன்று வாசல் கொண்ட சிறிய குகை என்பதும் குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை கிரிவல பாதையில் குபேர லிங்கம் அருகில் இந்த விநாயகர் உள்ளார். இந்த விநாயகரை வழிபட்டால் இடுப்பு, தலை, கை, கால்களில் உள்ள வலிகள் குணமாகும் என்பது ஐதீகம்.

விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் உள்ள நெற்குத்தி விநாயகர் :

இங்கு விநாயகர் லிங்கம் வடிவில் காட்சியளிக்கிறார். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கம் மீது படிந்துள்ள விநாயகரை வழிபடலாம். இங்குள்ள விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன. பிறர் பொருளை அபகரித்தவர், மற்றும் ஏமாற்றுபவர்களை இந்த கோயிலுக்கு அழைத்து வந்து சத்தியம் வாங்கும் நடைமுறை இன்று வரை உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அருப்புக்கோட்டையில் உள்ள படித்துறை விநாயகர் :

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே படித்துறை விநாயகர் கோயில் அமைந்துள்ளது. விநாயகர் ஜடாமுடியோடு வித்தியாசமாக இந்த கோயிலில் காட்சி தருகிறார். தரிசன நேரம் காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை. மாங்கல்ய பாக்யம் வேண்டுவோர் வழிபட சிறந்த கோயிலாகம். விநாயகர் சதுர்த்தி, மற்றும் பிரதோஷ நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

 

– இரா.நம்பிராஜன்

Twitter ID: https://twitter.com/Nambijournalist

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.