ஓடும் ரயிலில் நகை வியாபாரியிடம் ரூ.12.90 லட்சம், 5 கிலோ வெள்ளி திருட்டு – சிசிடிவியால் சிக்கிய திருடன்!

பெங்களூருவில் இருந்து சென்னை வந்த ரயிலில் நகை வியாபாரியிடமிருந்து ரூ.12.90 லட்சம், 5 கிலோ வெள்ளி திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்.  நகை வியாபாரியான இவர் கடந்த…

பெங்களூருவில் இருந்து சென்னை வந்த ரயிலில் நகை வியாபாரியிடமிருந்து ரூ.12.90 லட்சம், 5 கிலோ வெள்ளி திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்.  நகை வியாபாரியான இவர் கடந்த
ஆகஸ்ட்  29-ம் தேதி பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சென்னை மெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் பயணம் செய்தார். அலைச்சல் காரணமாக நன்றாக அயர்ந்து தூங்கிய சதீஷ்குமார்,  பேசின் பாலம் ரயில் நிலையம் அருகே கண்விழித்து பார்த்த போது ரூ.12.90 லட்சம் ரொக்கம்,  5 கிலோ 200 கிராம்  வெள்ளி இருந்த பையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.  இது தொடர்பாக சென்ட்ரல் ரயில்வே போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  கண்காணிப்பு
கேமராக்களில் பதிவான காட்சியை வைத்து,  ரயில் நிலையங்களில்
சுற்றித் திரிபவர்கள்,  ரயில் நிலையங்களில் தின்பண்டங்கள் விற்பவர்களிடம் தீவிர
விசாரணை நடத்தினர்.

ஒன்றரை மாத தேடுதல் வேட்டைக்கு பின் அரக்கோணத்தை சேர்ந்த ஜெகன் குமார்
(37) என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து 5 கிலோ 200
கிராம் வெள்ளி மற்றும் ரொக்கம் 12 லட்சத்து 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் அரக்கோணத்தை சேர்ந்த ஜெகன் குமார்,  மது
பழக்கத்துக்கு அடிமையானதால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று
விட்டார்.  இதையடுத்து வீட்டில் தனது தாயாருடன் ஜெகன் குமார் வசித்து
வருகிறார்.  வேலைக்கு செல்லாமல் ரயில் நிலையங்களில் சுற்றி திரிவது
அங்கே யாராவது தூங்கிக் கொண்டிருப்பவர்கள்,  மது போதையில் மயங்கி
கிடப்பவர்களிடமிருந்து பணம், பொருளை திருடி அதை விற்று மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளவர்.

கடந்த 29ஆம் தேதி சென்னை மெயிலில் அரக்கோணத்தில் ஏறிய ஜெகன் குமார்,  நகை
வியாபாரி சதீஷ்குமார் கண் அயர்ந்து தூங்குவதை பார்த்துள்ளார்.  நகை, பணம்
இருந்த பையை எடுத்துக் கொண்டு சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடைக்குள் ரயில்
நுழைந்த போது ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பித்துள்ளார்.

500 , 1000 ரூபாய் திருடி மது அருந்தும் தனக்கு இவ்வளவு பெரிய தொகை
கிடைத்தது ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும்,  உடனடியாக செலவு செய்தால் யாராவது
போட்டு கொடுத்து விடுவார்கள்,  போலீசாரிடம் சிக்கிவிடுவோம் என வீட்டிலேயே
பணத்தைப் பதுக்கி வைத்துள்ளார்.

இரண்டு மாதங்கள் கழித்து பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஜாலியாக செலவு செய்து கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளார்.  அதற்குள் போலீசாரிடம்
சிக்கிக் கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.