மாற்றுத் திறனாளிக்கு உதவுவதற்கு வீதியில் பாடல் பாடிய 10ம் வகுப்பு மாணவி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள நிலம்பூரில் சாலையோரமாக ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட ஆட்டோ ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பாடல்பாடியபடி யாசகம் கேட்டுக்கொண்டிருந்தார். அந்த பெண்ணின் கணவர் மாற்றுத்திறனாளியாக இருக்கும் நிலையில், பாடலின் இடையே தம்முடைய குடும்ப வறுமையையும் விளக்கினார்.
அந்த சமயத்தில், போத்துக்கல் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் ஆதிரா என்ற மாணவி, பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தனது தந்தையுடன் அப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, சாலையில் பாடல்பாடி யாசகம் கேட்கும் பெண்ணை கவனித்த ஆதிரா, சிறிது நேரம் அங்கேயே நின்றுள்ளார்.
பாடல் பாடிக்கொண்டிருந்த பெண், தன்னுடைய குரல் மங்கிய நிலையிலும் தொடர்ந்து பாட முயன்றுள்ளார். இதைக்கண்டு மனமிறங்கிய மாணவி, உடனடியாக தன்னுடைய தந்தையுடன் இணைந்து அந்த பெண்ணுக்கு தேநீர் வாங்கி கொடுத்துள்ளார். அது மட்டுமின்றி, பாடல் பாடும் பெண்ணை ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டு, அவர்களின் குடும்பத்திற்காக சாலையில் பாடல் பாட ஆரம்பித்தார் ஆதிரா.
தெருவில் யாசிக்கும் ஏழைக் குடும்பத்திற்காக மாணவி ஆதிரா இரண்டு பாடல்களை பாடினார். மாணவி பாடல் பாடும் வீடியோ அவ்வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததை அடுத்து, அந்த வீடியோ வைரலானது.
மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு உதவும் நோக்கில், பள்ளி மாணவி பாடல் பாடியதை அறிந்ததும் உள்ளூர் பிரமுகர்கள் மாணவி படிக்கும் பள்ளிக்கேச் சென்று ஆதிராவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிறருக்கு உதவும் எண்ணம் கொண்ட மாணவி ஆதிராவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்ததும் பள்ளி நிர்வாகமும் அவரை பாராட்டியது. அதுமட்டுமின்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மண்சரிவில் சொந்த வீட்டை இழந்து தற்போது மிகச்சிறிய வாடகை வீட்டில் வசிக்கும் ஆதிராவின் குடும்பத்திற்கு, சொந்தவீடு கட்டி கொடுக்கும் பொறுப்பை போத்துக்கல் கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







