மக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானையை உரிய சிகிச்சைக்குப் பின் பாதுகாப்பான இடத்தில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி எண்ணூர் கழி முகப்பகுதிகளில் சுமார் பத்து ஹெக்டேர் பரப்பளவில் 1.60 லட்சம் அபிசீனியா நாற்றுக்கன்றுகள் நடும் மிஸ்டி திட்டத்தை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கம்பத்தில் மக்களை அச்சுறுத்திய அரிசி கொம்பன் லேசான காயங்களுடன் பிடிபட்டுள்ளது. உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அதனை பாதுகாப்பான இடத்தில் விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்கம்பிகளில் உரசி யானைகள் இறக்காத வண்ணம் தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் வனத்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் இணைந்து மரங்கள் நட்டு வனத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
பாலிகீட்ஸ் புழு கடத்தல் போன்ற வனம் சார்ந்த குற்றங்களை தடுக்க கடலில் ரோந்து பணியை மேற்கொள்ள தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் கோடை காலத்தில் யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு தண்ணீர் தேவையை
பூர்த்தி செய்ய காட்டுப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகளை நிறுவி உள்ளோம்,
அலையாத்தி காடுகள் வளர்ப்பு போன்ற பல்வேறு புதிய திட்டங்கள் மூலம் 22
சதவீதமாக உள்ள வனத்தை 33 சதவீதமாக உயர்த்தும் புதிய திட்டத்தை துவக்கி
உள்ளோம். அந்நிய மரங்களை அகற்றி நாட்டு மரங்களை நட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.







