ஆசிய விளையாட்டு போட்டிகளில் 107 பதக்கங்களை வென்று சாதனை புரிந்த இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த செப். 23-ம் தேதி தொடங்கிய 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிவடைகின்றன. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றன. இந்த தொடரில் 48 வகையான விளையாட்டுகளில் 481 போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் ஆசியாவை சேர்ந்த சீனா, ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஈரான், கஜகஸ்தான் உள்ளிட்ட 45 நாடுகளை சேர்ந்த சுமார் 12 ஆயிரத்து 500 வீரர்கள் பங்கேற்றனர்.
துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, நீச்சல், வில்வித்தை, தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், வாள்சண்டை, ஆக்கி, பேட்மிண்டன், செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், படகுபந்தயம், கராத்தே உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
கடந்த ஆசிய போட்டியில் 16 தங்கம் உள்பட 70 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை இந்தியா பிடித்தது. இந்த நடைபெற்ற ஆசிய போட்டியில் இந்தியா சார்பில் 655 வீரர் வீராங்கனை பங்கேற்றனர். இதில் அக்டோபர் 7-ம் தேதி அன்று நடைபெற்ற ’மகளிர் கபடி’ இறுதிப் போட்டியில் இந்திய அணி சீனத் தைபே அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. இந்த பதக்கம் ஆசிய தொடரில் இந்தியா வென்ற 100வது பதக்கமாக அமைந்தது.
இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் 107 பதக்கங்களை வென்று சாதனை புரிந்த இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations to our Indian contingent at the #AsianGames2023 🏆.
With an impressive haul of 107 medals 🥇🥈🥉, our athletes have displayed remarkable skill, determination, and dedication. From our track and field champions 🏃♂️🏃♀️ to our sharp archers 🏹, fierce kabaddi teams 🤼… pic.twitter.com/ld4syL8nCq
— M.K.Stalin (@mkstalin) October 8, 2023
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில் (எக்ஸ்), “ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணியினருக்கு எனது பாராட்டுகள். 107 பதக்கங்களை வென்றதன் மூலமாக அபாரமான திறன், உறுதி மற்றும் அர்ப்பணிப்பை நமது விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
தடகள சாம்பியன்கள், கூர்மிகு வில்வித்தையர்கள், சீற்றமிகு கபடி அணியினர், பேட்மிண்டன் நட்சத்திரங்கள் என இந்தியாவின் பலதரப்பட்ட திறமையாளர்களும் பெரிதும் இந்த போட்டியில் மின்னியுள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த நமது வீரர்களுக்குச் சிறப்பு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வீரர்களின் தனிச்சிறப்பான பங்களிப்பால் உலக அரங்கில் நமது மாநிலத்துக்கு பெருமிதம் பொங்கச் செய்துள்ளீர்கள். இத்தகைய சிறப்பான பங்களிப்புடன் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களது முயற்சிகளும் சாதனைகளும் இங்கு இன்னும் பலரை ஊக்கப்படுத்தி வருகிறது. இந்திய அணி, வெகு சிறப்பு” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.







