பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக சென்னை மாநகரில் ரூ.5 கோடியில் செலவில் 3 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு இன்று பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 101 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், வானகரம், மேடவாக்கம், புதூர் உள்ளிட்ட இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், விழுப்புரம் மேல்மலையனூர் உள்ளிட்ட 5 இடங்களில் புதிய தாலுகா காவல் நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் காவலர்களுக்கு சீருடைப்படி 4 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த அவர், காவலர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை ரூ.30,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
பெண் காவலர்களுக்காக சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மகளிர் காவல் விடுதி கட்டப்படும் என்றும், சென்னையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக ரூ.5 கோடி செலவில் 3 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் கூறினார்.
மேலும், தமிழக காவல்துறை, தீயணைப்புத்துறைக்காக சட்ட ஆலோசகர் என்ற பணியிடம் புதிதாக உருவாக்கப்படும் என்றும், மோப்ப நாய்க்கு வழங்கப்படும் உணவுப்படி 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இதுதவிர கிரிப்டோ கரன்சி மோசடியைக் கண்டுபிடிக்க செயின் பகுப்பாய்வு கருவி வாங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- பி.ஜேம்ஸ் லிசா








