ஆடம்பர விழா நடத்தி தண்ணீர் பந்தல் திறக்கும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் நாம் தமிழர் கட்சியினர் கால்நடைகளுக்கு தண்ணீர் பந்தல் திறந்து அசத்தியுள்ளனர்.
கோடைக்காலம் ஆரம்பித்ததால் மக்களின் தாகம் தீர்க்க அரசியல் கட்சியினர் நீர், மோர் பந்தல் அமைப்பது என்பது இயல்பான ஒன்று. இது பொதுநல நோக்கத்தோடு நடந்தாலும் ஒருபுறம் அரசியல் கட்சியின் தலைவர்களையும், கட்சியின் சின்னங்களையும் மக்கள் மனதில் பதிய வைக்கும் வகையிலும், தேர்தல் நேரங்களில் ஓட்டுக்களை பெறும் சிந்தனையோடும் செயல்படுத்தப்படுகிறது.
அதனால் தான் தண்ணீர், மோர் பந்தல் அமைக்கும் இடங்களில் கட்சித் தலைவரின் படங்கள், கட்சியின் சின்னங்கள், கட்சி கொடிகள் அடங்கிய பதாகைகளும் வைக்கப்படுகின்றன. ஆனால் இதனை கடந்து திசையன்விளை நேருஜி திடல் அருகே நாம் தமிழர் கட்சியினரால் திறந்து வைக்கப்பட்ட தண்ணீர் பந்தலுக்கு அருகில் கால்நடைகளுக்கு என தனியாக தண்ணீர் தொட்டி அமைத்தது பொதுமக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.
நாள்தோறும் அவர்கள் மக்களுக்கு மண்பானையிலும், கால்நடைகளுக்கு இரும்பு தொட்டியிலும் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இந்தப் பகுதியில் ஆடு, மாடுகள், பறவைகள் போன்ற உயிரினங்கள் நாம் தமிழர் கட்சியினர் அமைத்த தண்ணீர் பந்தலில் நீர் அருந்திவிட்டு செல்கின்றன. ஓட்டுக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் தண்ணீர் பந்தல் அமைப்பவர்களுக்கு மத்தியில் ஜீவகாருண்யத்தோடு உயிரினங்களுக்காவும் தண்ணீர் பந்தல் அமைத்த நாம் தமிழர் கட்சியினர் மக்கள் கவனத்தை ஈர்த்தனர்.
—–அனகா காளமேகன்







