நெல்லை மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் குவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவிகளான மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஆண்டுதோறும் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.
இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று குழந்தைகள் நண்பர்கள் என குடும்பம், குடும்பமாக நெல்லை, தென்காசி மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
மேலும், வெப்பத்தை தணிக்க பெரியோர்களும் அருவியில் விளையாடி மகிழ்ந்தனர். குறிப்பாக தென்காசி குற்றாலம் அருவியில் நீர்வரத்து குறைந்து காணப்படுவதால், அங்கு சென்ற சுற்றுலா பயணிகளும் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி நோக்கி வந்தனர்.

மேலும், வனப்பகுதி என்பதால் சுற்றுலா பயணிகள் மதுபானங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை விதித்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் மறைத்து கொண்டு வந்த சுமார் 10 லிட்டர் மதுபானங்களைப் பாபநாசம் வனச்சோதனை சாவடியில் வனத்துறையினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: