மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் அஞ்சலி செலுத்தினர்.
அவர்கள் கருப்பு சட்டை அணிந்து சென்று, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து அமைச்சர்களும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ஜெயலலிதாவின் கனவுகளையும், லட்சியங்களையும் நிறைவேற்றிட, இன்று மாலை 6 மணிக்கு அதிமுக தொண்டர்கள் குடும்பத்தினருடன் அகல் விளக்கேற்றி, ஜெயலலிதாவின் உருவப்படம் முன்பாக நின்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.







