சிவகாசியில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
சிவகாசியில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 30 வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்சாலைகள், பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகளில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களிலிருந்து தனியார் ஏஜெண்டுகள் மூலம் சிவகாசி வந்து பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு உரிய சம்பளம் ஏஜென்ட் மூலம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீகாரில் இருந்து ஐந்து குடும்பத்தை சேர்ந்த 30 பேர் பீகாரை சேர்ந்த சுனில்குமார் யாதவ் (30 )என்பவர் மூலம் சிவகாசி வந்தனர். இதேபோன்று சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து 20 பேர் வேலை பார்க்க சிவகாசி வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தங்க வைக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு பணிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு 30 பேருக்கு உரிய சம்பளமும் உணவும் வழங்கப்படவில்லை என புகார் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து வான்முகில் டிரஸ்டை சேர்ந்த முனியராஜ் என்பவர், மாவட்ட சட்டப் பணி ஆணையக் குழு செயலாளர் மாரியப்பனிடம் தகவல் தெரிவித்தார். இந்த நிலையில் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா உத்தரவின்பேரில் சிவகாசி நீதிபதிகள் கல்யாண மாரிமுத்து, சந்தனகுமார், தினேஷ்குமார் மற்றும் திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் ராஜா ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, ஏட்டு பாக்கியலட்சுமி மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேற்று சுக்கிரவார்பட்டி, காளையார்குறிச்சி, எம். புதுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது 30 பேர் சட்ட விரோதமாக பணியில் அமர்த்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்களை மீட்டு விசாரணை நடத்தியபோது அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.







