பாஜக உடனான அரசியல் உறவு குறித்து அதிமுகவின் அமைப்பு செயலாளர் பொன்னையன் பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக, பாஜகவின் வளர்ச்சி என்பதுஅதிமுகவிற்கு நல்லது அல்ல என்பது தொடங்கி, கட்டாயமாக இந்தி திணிப்பை காங்கிரஸ் கட்சியை விட பாஜக தீவிரமாக செய்கிறது என்பது வரை அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் மத்தியில் கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு எதிரான கருத்துக்களாகவே உள்ளன. அதிமுக – பாஜக உறவில் மிக முக்கியமான ஒரு உரையாடலாக இது தொடங்கியுள்ளது. இது குறித்து நமது செய்தியாளர் நாகராஜன் நிகழ்த்திய ஒரு சிறிய உரையாடலை பார்க்கலாம்…
பாஜக வளர்ச்சி அதிமுகவிற்கு நல்லது அல்ல என நீங்கள் பேசிய பேச்சின் அரசியல் முக்கியத்துவம் என்ன?
அதிமுக சார்பணி கூட்டம் ரகசிய கூட்டம். அங்கு பேசும் பேச்சுகள் எதுவும் வெளியே வரக்கூடாது. அது மரபை மீறிய செயல். அங்கு பேசும் பேச்சை மிகைப்படுத்தி வெளியிட்டுவிடுகிறார்கள்.
திமுகவிற்கு பிரதான எதிர்க்கட்சியாக பாஜக தான் உள்ளதாக கூறுகிறார்கள். அது உண்மையா?
அது உண்மையில்லை. சட்டப்பேரவை தான் மக்களின் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தும் இடம். அங்கே சட்டரீதியாக எதிர்க்கட்சி என்ற இடத்தில் அதிமுக தான் உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக இபிஎஸ் இருக்கிறார். எதிர்க்கட்சி துணை தலைவராக ஓபிஎஸ் உள்ளார். எனவே, மக்களின் பிரதிநிதித்துவ அவையிலேயே எதிர்க்கட்சியாக அதிமுக தான் உள்ளது. இது குழந்தைகளுக்கு கூட தெரிந்த ஒன்று. ஏனோ வெளியுலகத்தில் அதிமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தை செய்கிறார்கள்.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா – தமிழ்நாட்டிற்கு இடையில் பாஜக இரட்டை நிலைப்பாட்டோடு செயல்படுகிறது என கூறினீர்கள். அப்படித்தான் செயல்படுகிறதா?
இது நாடறிந்த உண்மை. பாஜகவைப் பொறுத்த வரைக்கும். நதி நீர் பிரச்னையிலே தமிழ்நாட்டை வஞ்சிக்கிற ஒரு கட்சியாக பாஜக இருக்கிறது. இது அனைவருக்கும் தெரியும். விவசாய பெருங்குடி மக்களுக்கு பாதகமாக, குடிநீர் பிரச்னைக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிக்காக ஆட்சியாக பாஜக இருக்கிறது. காவேரி தண்ணீரில் 275 டிஎம்.சியை தமிழ்நாட்டிற்கு தர வேண்டும் என உச்சநீதிமன்றமே கட்டாய உத்தரவாக கூறிவிட்டது. ஆனால் அதை நிறைவேற்றுவது மத்திய அரசின் ஒரு கடமை. நீங்கள் ஒரு குற்றத்தை செய்துவிட்டு, அதைக் காலில் போட்டு மிதித்தால், உச்சநீதிமன்றம் உங்களை சிறையில் தள்ளிவிடும் அல்லவா? உச்சநீதிமன்ற உத்தரவின் படி இதுவரை தமிழ்நாட்டிற்கான தண்ணீரின் அளவை தராமல் பாஜக ஏமாற்றுகிறது. இப்படி சட்டத்தை மீறி தமிழகத்தை ஏன் பாஜக அரசு வஞ்சிக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது. கர்நாடக பாஜக காவேரியில் தண்ணீரை தாருங்கள், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுங்கள் என மத்திய அரசை கேட்கிறார்கள். மத்திய அரசும் மீறுகிறது. உச்சநீதிமன்றம் சொல்கிறது தமிழ்நாட்டிற்கு தான் தண்ணீர். அதை மத்திய அரசு மீறுகிறது.
முல்லைப்பெரியாறு பிரச்னை, பாலாறு பிரச்னையிலும் இப்படி தான் நடக்கிறது. இதைப் போலவே நீட் பிரச்னை. நீட்டைப் பொறுத்தவரை தமிழகத்திலே இரு மொழிக் கொள்கை, பல ஆண்டுகளாக இருக்கிறது. ஆனால், நீட் தேர்வு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களில் இருப்பவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். இந்தி பேசும் மாநில மாணவர்கள் தமிழ்நாட்டில் வர வேண்டும் என்பதற்காக நீட்டை ரத்து செய்ய பாஜக மறுத்துவிட்டது. தமிழக பாஜக அதற்கு எதிராக குரல் கொடுக்கவே இல்லை. காவேரி பிரச்னையிலும் தமிழக பாஜக போராடவில்லை. நீட்டிலேயும் தமிழக பாஜக போராடவில்லை. இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் ஈழத்தமிழர்களுக்காக கொண்டு வரப்பட்ட ஒப்பந்தங்கள் எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டது பாஜக. ஈழத்தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேரைக் கொன்ற ராஜபக்சே உடன் நெருக்கமான உறவை வைத்துக்கொண்டு தமிழர்கள் இழந்த உரிமையை மீட்டுத் தர பாஜக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கவில்லை. இது தமிழ் இனத்திற்கு பாஜக செய்யும் துரோகமாக உள்ளது. மாநில உரிமைகளை பறிக்கிறது. ஜி.எஸ்.டி கொண்டு வந்தார்கள், சேல்ஸ் டேக்ஸ்ட் கொண்டு வந்தார்கள். மாநிலத்திற்கு ஒத்துக்கொண்டதைக் கூட தர மறுக்கிறார்கள். தமிழக நலனுக்கு மாறான நிலைப்பாட்டை பாஜக மாற்ற வேண்டும். தமிழர் நலனே எங்கள் நலன் என்ற நிலையை பாஜக கருதினால் அது தான் பாஜக தமிழ்நாட்டில் வளரும்.
இந்தி திணிப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருவதாக ஒரு கருத்து உள்ளதே. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
காங்கிரஸ் காலத்தில் இருந்ததை விட பாஜக தற்போது அதிக அளவு இந்தி திணிப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து வருகிறது. இதை நாங்கள் கண்டித்துக்கொண்டே இருக்கிறோம். பாராளுமன்றத்தில் கண்டித்தோம். பல விதங்களில் கண்டித்து வருகிறோம். ஆனால், ஆர்.எஸ்.எஸ்.ஆல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது பாஜக அரசு என மக்கள் கருதுகிறார்கள். இந்தி திணிப்பில் தீவிரமாக இருக்கிறார்கள்.
இந்தியும் சமஸ்கிருதமும் தமிழகத்தின் முக்கிய மொழிகளாக வர வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. கலாச்சாரத்தை மாற்றுகிற வெறித்தன்மையில் இருக்கிறார்கள். 50 சதவிகிதத்திற்கும் மேல் வறுமையில் மக்கள் இருக்கும் போது மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து பாஜக வெறித்தனத்தில் இருக்கிறார்கள். இந்த அணுகுமுறையை பாஜக மாற்றிக்கொள்ள வேண்டும்.







