மத்திய அரசின் இ சந்தை இணையதளமான Government e-Marketplace மூலம் கடந்த நிதி ஆண்டில் ரூ.1.06 கோடி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் கொள்முதலுக்கு வணிகர்கள், சுயஉதவிக் குழுக்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்காக நரேந்திர மோடி அரசு கடந்த 2016ம் ஆண்டு gem.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கியது.
இதன்மூலம், மத்திய – மாநில அரசுகள், வெளிப்படையான, நேர்மையான, திறன்மிக்க, வேகமான முறையில் தேவையான பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றன. அரசும் அமைச்சகங்களும் தங்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை GeM இணையதளம் மூலம் மட்டுமே பெற வேண்டியது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல், பொதுத்துறை நிறுவனங்களும் GeM சேவையைப் பெற ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
இந்த இணையதளம் மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், GeM இணையதளத்தின் மூலம் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். கடந்த 2017-18 நிதி ஆண்டில் இந்த இணையதளம் மூலம் ரூ.6,220 கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகவும், கடந்த நிதி ஆண்டில் இது ரூ.1.06 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசின் இந்த இணையதளத்தின்மூலம், ஏழைகள், பெண்கள், சுய உதவிக்குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவை தங்கள் பொருட்களை அரசுக்கு விற்கு, பயன்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இணையதளத்தில் கைவினைஞர்கள், சிறுதொழில்புரிவோர், சுய உதவிக்குழுக்கள், சிறு-குறு நிறுவனங்கள் உள்ளிட்டோர் பதிவு செய்து பயன்பெற்று வருவதாகவும் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
அரசு மட்டுமின்றி, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், அமைச்சகங்கள், அரசு துறைகள், தன்னாட்சி அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை GeM போர்டல் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுவது அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.









