நாங்குநேரியில் பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து விவசாயிகளை ஓட ஓட விரட்டிய கரடியை பிடிக்க 2ம் நாளாக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரியகுளத்தின் கரையில் மறுகால்குறிச்சி செல்லும்
சாலையோரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழை, நெல் பயிர் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பகலில் விளைநிலங்களில் விவசாயிகள், விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கரடி புகுந்தது. வயலில் வாழை இலைகள் அறுத்து கொண்டிருந்த விவசாயியை கரடி ஓட, ஓட விரட்டியுள்ளது.
இந்நிலையில் அக்கம், பக்கத்து விளைநிலங்களில் வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயிகளும் அச்சத்தில் சிதறி ஓடினர். அதன் பின் கரடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, மறுகால்குறிச்சி செல்லும் சாலையை கடந்து, பெரியகுளத்துக்குள் சென்றுள்ளது. அதன் பின் மீண்டும் பெரியகுளத்தில் இருந்து வெளியேறி விளைநிலங்களுக்குள் புகுந்து மறைந்தது. இந்த சம்பவம் நாங்குநேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்குறுங்குடி, நெல்லை வனத்துறை ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். கரடி நடமாட்டம் காணப்பட்ட விளைநிலங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களிடம் விவசாயிகள், அச்சுறுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கரடியை உயிருடன் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. அதில் கரடி விரும்பி உட்கொள்ளும் பழவகைகள் வைத்து வனத்துறையினர் இன்று 2ம் நாளாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 30ம் தேதி பெருமாள்குளத்தில் பிடிக்கப்பட்டு களக்காடு வனப்பகுதிக்குள் விடப்பட்ட கரடி மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி நாங்குநேரிக்குள் புகுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
—ரூபி.காமராஜ்







