நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: ஊருக்குள் புகுந்த கரடியை பிடிக்க வனத்துறை நடவடிக்கை

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே ஊருக்குள் புகுந்த கரடி மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கரடியை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிப்பு…

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே ஊருக்குள் புகுந்த கரடி மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கரடியை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள பெருமாள்குளம் கிராமத்தில் கடந்த சில
நாட்களாக கரடி நடமாட்டம் காணப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து வெளிவந்த கரடி
மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல், பெருமாள்குளம் அருகே உள்ள பொத்தைகளில்
தஞ்சமடைந்து உணவு மற்றும் குடிநீருக்காக ஊருக்குள் புகுந்து, பொதுமக்களை
அச்சுறுத்தி வருகிறது.

மே 2-ம் தேதி அதிகாலை அங்குள்ள இசக்கியம்மன் கோயிலில் நுழைந்த கரடி விளக்குகளில் இருந்த எண்ணையை குடித்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஊருக்குள் சுற்றி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கடந்த 2ம் தேதி நியூஸ் 7 தமிழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதனைதொடர்ந்து களக்காடு வனத்துறையினர் கரடி நடமாட்டம் உள்ள பெருமாள்குளத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். எந்த இடத்தில் கூண்டு வைப்பது என்று ஆலோசனை நடத்தினர்.

மேலும் கரடி உலா வந்த கோயிலையும் பார்வையிட்டு,பின் அங்கு பதிந்திருந்த கரடியின் கால்தடங்களையும் சோதனையிட்டனர். அதன்பின் கோயிலின் அருகே கரடியை உயிருடன் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.

கூண்டுக்குள் பழ வகைகள் வைத்து வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். பழத்தை உண்பதற்காக கரடி வரும் போது கூண்டுக்குள் சிக்கி விடும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.