மக்களை மதத்தால் பிரிப்பவர்களுக்கு திராவிட மாடல் என்றால் என்ன என்பது புரியாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் சாடியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் திமுக ஆட்சியின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு “ஈடில்லா ஆட்சி, ஈராண்டே சாட்சி” என்ற திமுக ஆட்சியின் சாதனை மலரை வெளியிட்டார். மேலும் ஒரு லட்சம் பேருக்கு ஓய்வூதியப் பயன்களை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுமைப் பெண் மற்றும் நான் முதல்வன் திட்டங்களின் கீழ் ஆணைகளையும் வழங்கினார். முன்னதாக திமுக ஆட்சியின் இரண்டாண்டு கால சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :
”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…மறக்க முடியாத குரல் இது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மக்கள் பணிக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டேன். மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முடியுமா? என என்னை நானே கேட்டுக்கொண்ட போது தெம்பும், தைரியமும் கொடுத்தவர்கள் 3 பேர். பெரியார், அண்ணா, கலைஞர்.
பிறந்து வளர்ந்ததே பொது வாழ்க்கையின் அத்தனை தன்மையும் கொண்ட கோபாலபுரத்தில்தான். ஓய்வின்றி, என் சக்திக்கு மீறி பணியாற்றுகிறேன். நீங்கள் காட்டும் அன்பில் கரைகிறேன். பணியை சரியாக செய்துகொண்டிருக்கிறேன் என்பது நிம்மதியை தருகிறது. திராவிட மாடல் என்றால் என்னவென்று கேட்கிறவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் புன்னகையே பதில் சொல்கிறது. சாதியால், மதத்தால் பிரித்துப் பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் பற்றி புரியாது. மக்களுக்கு சம்பந்தமில்லாத பதவியிலிருப்பவர்கள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
இதையும் படியுங்கள் : முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் – 30,122 பள்ளிகளில் விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு
ஏழை மக்களின் நலன் காப்பவர்களுக்கான குடியிருப்பாகியுள்ளது ஜார்ஜ் கோட்டை. இந்த ஆட்சியின் முகம் அதிகாரம் அல்ல. அன்பு, ஆணவம் அல்ல. ஜனநாயகம், அலங்காரம் அல்ல. எளிமை, சர்வாதிகாரம் அல்ல. சமத்துவம், சனாதானம் அல்ல. சமூக நீதி. மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை செயற்கையாக வரவழைக்க முடியாது. மக்களின் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி. துறைகள் தோறும் சாதனைகளை செய்து காட்டியுள்ளோம். சீர்செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 350க்கும் மேற்பட்ட ஆய்வுக்கூட்டங்கள் நடத்தியுள்ளேன். 6,905 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். 2 ஆண்டு சாதனைகளை சொல்லி முடிக்க 2 நாட்கள் இங்கேயே தங்கியிருக்க வேண்டும்”.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.








