விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கோயில் வாயிலில் அமர்ந்து சாதி சான்றிதழ், குடும்ப அட்டைகளை ஒப்படைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் இக்கோயில் இந்து சமய நிலைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வராததால் கிராம மக்களே கோயிலுக்கான பராமரிப்பு மற்றும் திருவிழா பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெற்றபோது மேல்பாதி காலனி பகுதியை சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலில் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோயில் வாயிலில் நின்று சாமி தரிசனம் செய்ய கூறி அவர்களை அனுப்பி விட்டனர். கோயில் உள்ளே சென்று தான் சாமி தரிசனம் செய்வோம் என அவர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து நேற்றைய தினம் ஆட்சியர் அலுவலகத்தை தாழ்த்தப்பட்ட மக்கள் முற்றுகையிட்டபோது அமைச்சர் பொன்முடி காவல் துறை பாதுகாப்போடு சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து மேல்பாதி கிராம மக்கள் இன்றைய தினம் மேல்பாதி தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலில் கிராம மக்கள் ஒன்றினைந்து சாதி சான்றிதழ், குடும்ப அட்டை போன்ற அரசு ஆவணங்களை ஒப்படைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல ஆண்டுகளாக கிராம மக்கள் யாருமே கருவறைக்கு சென்று சாமி தரிசனம் செய்யாத நிலையில் கோவில் கருவறைக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றும் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மேல் பாதி கிராமத்தில் பரபரப்பு நிலவியதால் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.







