கர்நாடகாவின் முதலமைச்சர் பதவியை காங்கிரஸ் வெற்றிக்கு காரணமான டி.கே.சிவக்குமார் விட்டுக் கொடுத்தது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும்போட்டி நிலவியது.
கர்நாடகாவில் கனகபுரா தொகுதியில் பாஜக அமைச்சர் ஆர்.அசோக்கை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.கே.சிவக்குமார் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் நம்பிக்கையை பெற்றவராக கருதப்படுகிறார். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான இவர் எதிர்காலத்தில் காங்கிரசின் தேசிய தலைவர்களில் ஒருவராவார் என எதிர்பார்க்கப்பட்டவர்.
கடந்த 3 நாட்களாக முதலமைச்சரை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்ட நிலையில், இன்று காலை இழுபறி முடிவுக்கு வந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தார்.
நேற்று மதியம் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருடன் தனித்தனியாக ராகுல்காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு, சித்தராமையா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவியது. சோனியா காந்தி டி.கே.சிவக்குமாரிடம் நீங்கள் கர்நாடக மாநிலத்தைக் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் இங்கு எனது அடிப்படையான பொறுப்புகளை கவனித்து வருகிறேன். நீங்களும் உங்கள் அடிப்படை பொறுப்புகளை கவனியுங்கள், கட்சியின் மீது நம்பிக்கை கொண்டிருங்கள். இந்த வெற்றிக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்ற உண்மையை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று கூறியதாக தெரியவந்தது. மேலும் இந்த வார்த்தை தான் சிவக்குமாரின் மனதை மாற்றியதாக கூறப்படுகிறது.
மேலும் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் சித்தராமையாவுக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும், டி.கே.சிவக்குமார் மீதான சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு பின்னர் பிரச்னையை உருவாக்கும் என்பதாலும், அது நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவு ஏற்படலாம் என்பதாலும், 2024 தேர்தலுக்கு பின்னர் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து அளிப்பதாக கட்சி மேலிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சித்தராமையாவுக்கு குர்பா, லிங்காயத்து, வொக்கலிகா, இஸ்லாமிய சமூகத்தினரின் ஆதரவு அதிகம் உள்ளதாகவும், ஒருவருக்கு ஒரு பதவி என்ற சிந்தன் சிவிர் மாநாட்டின் தீர்மானத்தின்படி தற்போது சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவியும், டி.கே.சிவக்குமார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் மேலிடம் தெரிவித்துள்ளது.







