சேலம் காவல் நிலைய வளாகத்தின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்கப்பட்டது. கொலையா, உயிரிழப்பா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் பேருந்து நிலையம் அருகே உள்ளது டவுன் காவல் நிலையம், இந்த காவல் நிலைய வளாகத்தில், டவுன் காவல்நிலையத்தின் குற்றப்பிரிவு, மாநகர மத்திய குற்றப்பிரிவு, இதனை ஒட்டி மகளிர் காவல்நிலையமும், உதவி ஆணையர் அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன.
இந்த காவல் நிலைய வளாகத்தின் நுழைவாயில் அருகே உள்ள அசோகா மரத்தில் இன்று விடியற்காலை அடையாளம் தெரியாத நபரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.இதை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சடலத்தை கீழே இறக்கி வைத்தனர்.இறந்தவரின் சடலத்தின் கைகளில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மனோகரி என்றும் பச்சை குத்தப்பட்டுள்ளது. சுமார் 40 முதல் 45 வயது வரை இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த போலீசார், சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார், உயிரை மாய்த்துக் கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என டவுன் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகர பேருந்து நிலையம் அருகே கடைவீதிகளுக்கு செல்லும் வழியில் டவுன் காவல்நிலையம் அமைந்துள்ளது. எந்தநேரமும் மக்கள் நடமாட்டம் கொண்ட இப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.







