ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தரிசு நிலங்களில் வளர்க்கப்படும் தீக்குச்சி தயாரிக்க பயன்படுத்தப்படும் பியன் மரங்கள் நன்கு வளர்ந்து வருவதால் மேலும் பல தரிசி நிலங்களில் நட்டு வளர்க்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி தாலுகால் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த பகுதியாகளாக உள்ளது. மேலும் சேர்வராயன் மலைத் தொடரின் மேற்கு பகுதியை ஒட்டி உள்ள பகுதி என்பதால், இங்கு அதிக அளவில் தரிசு நிலங்கள் காணப்படுகிறது. வனத்துறை மற்றும் வேளாண்துறை சார்பாக தரிசு நிலங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்குப் பியன் மரங்களை இலவசமாக வழங்கி தரிசு நிலங்களில் மரம் வளர்ப்புக்கு ஊக்குவித்தனர். இதை தொடர்ந்து ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதியில் சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் தீ குச்சி தயாரிக்க பயன்படும் பியன் மரம் வளர்க்கப்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக போதிய மழை பெய்து வருவதால் தற்போது பியன் மரம் நன்கு வளர்ந்து காணப்படுகிறது .
பொதுவாக பியன் மரங்கள் தீக்குச்சி தயாரிக்க பயன்படுவதால் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. இதன் காரணமாக தரிசு நிலங்களில் மேலும் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து வனப்பகுதி மற்றும் கரடு பகுதியில் உள்ள தரிசு நிலங்களை மேம்படுத்தும் திட்டத்தில் கீழ், பியன் மரங்கள் அதிக அளவில் நடவு செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். விவசாயிகளும் இதற்கு ஆர்வம் காட்டி பியன் மரங்களை நடவு செய்து வருகின்றனர்.
-சௌம்யா.மோ






