பிரிஜ் பூஷண் வீட்டில் விசாரணை: பாலியல் புகாரில் போலீசார் நடவடிக்கை!

பாலியல் குற்றசாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் வீட்டில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது…

பாலியல் குற்றசாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் வீட்டில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள மல்யுத்த வீராங்கனைகள், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து போராடி வருகின்றனர்.

கடந்த மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் இந்த கைது நடவடிக்கைக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இதையடுத்து பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம் என்று மத்திய அரசுக்கு வீராங்கனைகள் எச்சரிக்கை விடுத்தனர்.

அதன்படி, சர்வதேச போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசுவதற்காக, மல்யுத்த வீராங்கனைகள் உத்தரப்பிரதேச மாநிலம் ஹரித்வார் சென்றனர். அங்கு விவசாய சங்கத் தலைவர்கள் வீராங்கனைகளை சமாதானம் செய்ததால் பதக்கங்களை கங்கையில் வீசுவதை கைவிட்டனர்.

தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில், உத்திரபிரதேசம் கோண்டாவில் உள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் வீட்டில் காவல் துறையினர் இன்று விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் இருந்த ஊழியர்கள் 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிஷ் பூஷண் மீதான பாலியல் புகாரில் இதுவரை சிறப்பு புலனாய்வு குழு மொத்தம் 137 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.