மேட்டூர் அணை உபரி நீர் வெள்ளத்தில் செல்பி எடுக்க சென்று வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் அணையில் இருந்து இன்று காலை முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காலை 10 மணிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது 92 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேட்டூர் அணையின் 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவதைக் காண காலை முதல் பொதுமக்கள் அங்கு குவிந்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியைச் சேரந்த மூன்று இளைஞர்கள் மேட்டூர் அனல்மின் நிலையம் சாலையில் காவிரி வெள்ளத்தை பார்வையிட சென்றுள்ளனர். அதிகப்படியான நீர்வரத்து வருவதை அறியாத அவர்கள் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றபோது, வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் மற்றும் சிறப்பு காவல் படையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற கடும் போராட்டத்திற்கு இடையே கயிறு கட்டி மூன்று இளைஞர்களையும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.