பேக்செய்யப்பட்டு லேபிள் ஒட்டி விற்கப்படும் அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் இன்று அரிசி ஆலை உரிமையாளர்கள் போராட்டம் நடைபெற்றது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் வரும் திங்கட்கிழமை முதல் அரிசி விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
சண்டிகரில் சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு லேபிள் ஒட்டி விற்கப்படும் அரிசி, கோதுமை, உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இநத வரி விதிப்பு வரும் திங்கட்கிழமை முதல் அறிமுகமாகிறது. இந்நிலையில் இந்த வரிவிதிப்பைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் அரிசி ஆலை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அரிசி அத்தியாவசிய உணவுப்பொருளாக இருந்து வரும் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 5 தென் மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளை மூடி அதன் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 15 ஆயிரம் மொத்த அரிசி வியாபாரிகள் மற்றும் 15 ஆயிரம் சில்லரை அரிசி வியாபாரிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்று ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்த அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருச்சி மாவட்டத்தில் மாவட்டம் 150-க்கும் அதிகமான அரிசி ஆலைகள் பங்கேற்றுள்ளன. பதிவு செய்யப்பட்ட பிராண்டில் அரிசி விற்பனை செய்யும் பட்சத்தில் ஜிஎஸ்டி வரி
விதிக்கப்படும் என்ற அறிவிப்பினால், போலியாக பலர் அரிசி விற்பனை செய்ய முயல்வார்கள் என்றும் இதனால் அரிசி ஆலை தொழில் நலிவடையும் என்றும் திருச்சி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
அரிசிக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை உடனடியாக திரும்ப பெறக் கோரி மதுரை
மாவட்டத்தில் ஏராளமான அரிசி ஆலைகள் மூடப்பட்டிருந்தன. இது குறித்து மதுரையில் நியூஸ்7 தமிழுக்கு கருத்து தெரிவித்த அரிசி ஆலை உரிமையாளர்கள், ஜிஎஸ்டி வரிவிதிப்பு காரணமாக வரும் திங்கட்கிழமையில் இருந்து அரிசிக்கான விலை கிலோ ஒன்றுக்கு ரூ 3 முதல் ரூ 5 வரை உயர வாய்ப்பு இருப்பதாக கூறினர்.அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு ஒன்றிய அரசு விதித்த ஜி.எஸ்.டி வரியை வாபஸ் பெற
வேண்டும் என மதுரையில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வலியுறுத்தினார்.
பாக்கெட்டில் அடைக்கப்பட்டு லேபிள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படும் அரிசி,பருப்பு, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 5% ஜிஎஸ்டி
வரியை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி திருநெல்வேலியில் அரிசி
மொத்த விற்பனையாளர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள், ஒரு நாள் வேலை நிறுத்த
போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜிஎஸ்டி வரி விதிப்பை உடனடியாக திரும்பபெற அவர்கள் வலியுறுத்தினர். சிவகங்கை மாவட்டத்தில் புதுவயல் மற்றும் பள்ளத்தூரில் 300-க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் இயங்கி வரும் நிலையில், இன்று அனைத்து ஆலைகளும் மூடப்பட்டு ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த போராட்டம் காரணமாக காரணமாக 10ஆயிரம்
தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்
அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு
மாநிலங்களிலிருந்து நெல்வரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் செங்குன்றம் நெல், அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் கோபி கூறினார். விவசாயிகள், சாமானியர்கள் நலன்காக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி உடனடியாக அரிசிக்கான ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறச்செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சேலம் செவ்வாய்பேட்டை, லீ பஜார், பழைய மார்க்கெட் தெரு உள்ளிட்ட
பல்வேறு பகுதிகளில் ஏராளமான அரிசி கடைகள் இன்று அடைக்கப்பட்டிருந்தன.
இந்த ஒரு நாள் கடையடைப்பு காரணமாக பலநூறு கோடி ரூபாய்க்கு வர்த்தகம்
பாதிக்கப்பட்டுள்ளதாக அரிசி கடை உரிமையாளர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்கள்
தகவல் தெரிவித்துள்ளனர்.

அரிசி ஆலைகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரியை
கண்டித்து இன்று ஆரணி பகுதிகளில் உள்ள ஆரணி, களம்பூர், கஸ்தம்பாடி,
அய்யம்பேட்டை, குன்னத்தூர், சேவூர், பையூர் பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட
அரிசி ஆலைகள் மூடப்பட்டிருந்தன. இந்திய அளவில் அரிசிக்கு பெயர் போன ஆரணி பகுதியில் இருந்து சென்னை, கோயம்புத்தூர், மதுரை, உள்ளிட்ட நகரங்களுக்கும், பல்வேறு
மாவட்டங்களுக்கும் மட்டுமன்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அரிசி கொண்டு செல்லப்படுவது வழக்கம். மேலும் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா,
தாய்லாந்து ,பர்மா, உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் தினமும் 500 டன் அரிசி ஆரணி பகுதியிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற அரிசி ஆலைகள் வேலை நிறுத்தம் காரணமாக தொழிலாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் அரிசி ஆலை உரிமையாளர் சங்கம், கரூர் நகர உணவு வணிகர்கள்
சங்கம், கரூர் மாவட்டம் வர்த்தக மற்றும் தொழிலகம் சார்ந்த நிறுவனங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. 1100 அரிசி கடைகள் மற்றும் நிறுவனங்கள் இன்று மூடப்பட்டிருந்தன. இதனால் இன்று மட்டும் சுமார் 25 கோடி ரூபாய்
வர்த்தகம் பாதிப்பு ஏற்ப்பட்டதாக அரிசி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.







