கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், இருசக்கர வாகனங்களை திருடி உதிரிபாகங்களை பிரித்து வீட்டிற்குள் பதுக்கி வைத்து விற்பனை செய்த இளைஞரை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், குலசேகரம் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் காணாமல் போனது. இதில் குலசேகரம் அண்ணாநகரை சேர்ந்த ஸ்ரீகண்டன் என்பவர் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் குலசேகரம் அருகே செறுதிக்கோணம் அரியாம்பகோடு பகுதியில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனங்களை பிரித்து வைத்திருப்பதாகவும், அவருடைய நடவடிக்கை சந்தேகப்படும்படியாக இருப்பதாகவும் தெரியவந்தது. இதனை அறிந்த ஸ்ரீகண்டன் அங்கு விரைந்து சென்று பார்த்த போது அவருடைய இருசக்கர வாகனத்தை அந்த இளைஞர் ஒவ்வொரு பகுதியாக பிரித்து வைத்திருப்பது தெரியவந்தது.
உடனே அவரை பிடித்து ஊர் மக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னா் போலீசார் விசாரணை நடத்தியதில் இருசக்கர வாகனங்களை திருடியவர் சுமித் (27) என்பதும் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் வேறு ஏதேனும் திருட்டு வழக்கில் சுமித்துக்கு தொடர்பு இருக்கிறதா? எனவும் விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







