கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ்- டிடிவி தினகரன் சந்திப்பு நடைபெற்ற நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி சையது கான் ஆகியோர் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வீட்டிற்கு சென்று சந்தித்தனர். அவர்களை வாசலில் காத்திருந்து அழைத்துச் சென்று அரை மணி நேரம் பேசியுள்ளார் டிடிவி தினகரன். சந்திப்பிற்கு பின்னர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், ’அதிமுகவை மீட்டெடுக்க இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் தொண்டர்களை ஒருங்கிணைப்போம். கட்சியை உண்மையான தொண்டர்களிடம் கொண்டு செல்வோம்.’’ என்று தெரிவித்தனர்.
குறிப்பாக, மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், ‘தொண்டர்களின் கோரிக்கையையடுத்து தலைவர்கள் இணைந்திருக்கிறார்கள். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.’’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஓபிஎஸ்- டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார். அதில், காலம் கடந்து செய்கிற உதவியாலும், காலம் கடந்து எடுக்கிற முடிவாலும் பயனில்லை என தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








