நடிகர் விஜய் உறவினரும், சினிமா தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் நிறுவனங்களில் 4 வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
நடிகர் விஜய் உறவினரும், சினிமா தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ, சினிமா தயாரிப்பு மற்றுமல்லாமல் பல்வேறு தொழில்நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவற்றில், சீன மொபைல் போன் நிறுவனமான ஷாவ்மியின் உதிரிபாகங்களை ஏற்றுமதி-இறக்குமதி கையாள்வதிலும் அவரது நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் ஷாவ்மி (xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களிலும், பெங்களூருவிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள பிரிட்டோவின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
தற்போது, சேவியர் பிரிட்டோவுக்கு சொந்தமான ராயப்பேட்டை, மண்ணடி பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் 4 வது நாளாக வருமான வரித்துறை தீவிர சோதனை நடத்தி வருகிறது.
மேலும் சேவியர் பிரிட்டோவுக்கு சொந்தமான, உலக நாடுகளுக்கு செல்போன் உதிரிபாகங்கள் ஏற்றுமதி-இறக்குமதி செய்யக்கூடிய கெர்ரி இன்டேவ் லாஜிஸ்டிக் என்ற பெயரில் பெரிய நிறுவனங்கள் மண்ணடி, ராயப்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனங்களில் 4 வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்போடு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோன்று சென்னை அடையாறு பகுதியில் அமைந்துள்ள சேவியர் பிரிட்டோவினுடைய பங்களா வீடு மற்றும் ஆதம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள கல்வி நிறுவன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இரண்டு நாட்களிலேயே சோதனை நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement: