பிரபல திரைப்பட இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 90.
தமிழில், எம்.ஜி.ஆர் நடித்த, நாளை நமதே, சிவகுமார் நடித்த மறுபக்கம், கமல்ஹாசன் நடித்த நம்மவர் உட்பட பல படங்களை இயக்கியவர் சேதுமாதவன். தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் 60-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனை ’கண்ணும் கரலும்’ என்ற படம் மூலம் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியவர் இவர். பின்னர் ’கன்னியாகுமரி’ படம் மூலம் நாயகனாகவும் அங்கு நடிக்க வைத்தார். நடிகர் சுரேஷ்கோபியை ’ஓடயில் நின்னு’ என்ற படத்தில் குழந்தை நடத்திரமாக அறிமுகப்படுத்தியவரும் இவர்தான்.
சேதுமாதவன், மலையாளத்தில் ஒடயில் நின்னு, யாக்ஷி, கடல்பாலம், அச்சனும் பாப்பாயும், ஆரா நாழிக நேரம், ஒப்போல் உட்பட முக்கிய படங்களை இயக்கியுள்ளார். தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவர், குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலை உயிரிழந்தார். அவர் மறைவுக்கு மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/ikamalhaasan/status/1474224966522458114
நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன், புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம். மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர். தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார். என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்’ என்று கூறியுள்ளார்.








