குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால் வருமானவரி அபராதத்தை கைவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
1994-95ம் ஆண்டுக்கான வருமான வரியாக சசிகலா தரப்பில் 28.86 லட்சம் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில், சசிகலா 80 ஏக்கர் நிலம் வாங்கியிருந்தது மறைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை அளித்தது. இதன் அடிப்படையில் 1994-95ம் ஆண்டுக்கான வருமான வரியாக ரூ. 48 லட்சம் செலுத்தும்படி சசிகலாவிற்கு 2002ம் ஆண்டு வருமானவரித்துறை உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் சசிகலா முறையீடு செய்தார். தீர்ப்பாயம் சசிகலாவுக்கு ஆதரவாக வருமான வரித்துறையின் உத்தரவை ரத்து செய்து ஆணையிட்டது. இந்நிலையில் இந்த ஆணையை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “ஒரு கோடிக்கும் குறைவான தொகை என்பதால் தனக்கு எதிரான வருமான வரித்துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று சசிகலா கூறியிருந்தார்.
இதனையடுத்து இன்று நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், “ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான அபராதம் தொடர்பான வழக்கை கைவிடுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கை சசிகலா வழக்கிற்கு பொருந்தாது.” என தெரிவித்தது. இது தொடர்பாக சசிகலா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
Advertisement: