ஊழலுக்கு எதிரான பாஜகவின் நிலைப்பாடு என்றும் மாறாது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் தேதி முதல் மனதில் குரல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார். அன்று முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதில் குரல் நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய வருகிறார். அந்த வகையில் 100 வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு ஒளிபரப்பானது.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு பாஜக சார்பில் சென்னை மெரினா நடுகுப்பத்தில் மனதில் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் , பாஜக செயற்குழு உறுப்பினர் நடிகை நமீதா ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது, பாஜக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய செம்மொழியான தமிழ் மொழி பாடல் ஒலிக்கப்பட்டது. பின்னர் மீனவ மக்களுடன் சேர்ந்து பாஜக நிர்வாகிகள் பிரதமர் ஆற்றிய உரையை கேட்டனர். இதனையடுத்து மனதின் குரல் உரையில் பிரதமர் மோடி இதுவரை தமிழ்நாடு குறித்து பேசிய கருத்துகளை தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை புத்தகமாக வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இதுவரை நடைபெற்ற 99 மனதின் குரல் நிகழ்ச்சிகளிலும், பிரதமர் மோடி தமிழர்களுக்கு மிக முக்கிய இடத்தை கொடுத்துள்ளார். 100வது நிகழ்ச்சியிலும் தமிழ்நாடு பழங்குடி மக்கள் மற்றும் பெண்கள் குறித்து பேசியுள்ளார். தமிழகம் , புதுச்சேரியில் 40 இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற கருத்தை எடப்பாடி பழனிசாமியும் , நானும் பாஜகவின் தேசிய தலைமையிடம் முன்வைத்தோம். அது நடக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருப்பதால் எந்த கட்சி , எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை இப்போது பேச வேண்டிய அவசியமில்லை. கூட்டணி தொடர்பாக அதிமுக தலைவர்களுடன் இணைந்து பாஜகவின் தேசிய தலைவர்களை சந்தித்துள்ளோம். அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளோமா என்பதை அந்த சந்திப்பின் மூலமும், சந்திப்பின்போது வெளியான புகைப்படங்களை அடிப்படையாக வைத்தும் ஊர்ஜிதம் செய்து கொள்ளலாம். அதிமுக தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த திசையில் செல்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
ஊழலுக்கு எதிரான பாஜகவின் நிலைப்பாடு எப்போதும் மாறாது . ஊழலுக்கு எதிராக பாஜக எப்போதும் போராடும். அதுகுறித்து நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அனைவரும் பார்ப்பீர்கள். கட்சி தலைவர்கள் எங்களுக்கு முக்கியம் கிடையாது. ஊழல் யார் செய்திருந்தாலும் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. இன்னும் 9 மாதத்தில் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தில் அது தெரியவரும்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை காட்ட வேண்டிய தேவையும் , கட்டாயமும் எங்களுக்கு இருக்கிறது. ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஒருபடி கூட பின்வாங்க மாட்டோம். தொடர்ந்து முன்னால்தான் அடிவைப்போம். யார் ஊழல் செய்திருந்தாலும் அதுகுறித்து வெளியிடுவோம். கலைஞர் தொலைக்காட்சியில் தனக்கு பங்கு இருந்ததை கனிமொழி 2 மாதங்களுக்கு முன்பு ஒத்துக் கொண்டுள்ளார். தற்போது அவருக்கு பங்கு இல்லை என்று கூறியுள்ளார். அப்பொழுது அவரது பங்குகளை விற்ற பணம் எங்கு சென்றது ..? அந்த பணத்தில் அநாதை ஆசிரமத்திற்கு ஏதும் சோறு போட்டாரா..?
தொலைபேசி ஆடியோ விசயத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எந்த தவறும் செய்யவில்லை.. அவர் தந்துள்ளது ஒப்புதல் வாக்குமூலம்தான். ஒருவேளை அந்த ஆடியோ தவறானது என்று என் மீது வழக்கு தொடர்ந்தால் நிதி அமைச்சரின் தொலைபேசி உரையாடல் குறித்த ஒரிஜினல் ஆடியோவை வெளியிட நான் தயார். எந்த ஆய்வகத்திற்கும் அதை பரிசோதனைக்கு உட்படுத்தலாம். பொதுநலனுடன், பொது வெளியில் யாருடைய ஆடியோ பதிவையும் வெளியிடலாம் என உச்ச நீதிமன்றமே கூறியள்ளது. நாங்கள் அவரது தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்டோ , ஸ்டிங் ஆபரேசன் முறையில் பதிவு செய்தோ வெளியிடவில்லை. ஆடியோ குறித்து திமுகவினர் புகாரளித்தால் எங்கே , யாரிடம் பேசப்பட்டது என்ற விவரத்தை வெளியிடுவோம்.
முதலமைச்சரின் மெட்ரோ முதல்கட்ட பணி ஊழல் தொடர்பாக சிபிஐயிடம் நான் புகாரளித்து விட்டேன். நான் மட்டுமின்றி தனிநபர்கள் , நிறிவனங்கள் என மேலும் 6 நபர்களும் அதுகுறித்து புகாரளித்துள்ளளர். 296 பக்கங்களில் எனது வாழ்க்கை குறித்த, வங்கி விவரங்களை வெளியிட்டுள்ளேன். திமுகவினர் தங்களது வங்கி விவரங்களில் 1 வரியையாவது வெளியிடுவார்களா..? அதற்கான தெம்பு திராணி அவர்களுக்கு இருக்கிறதா..?. G ஸ்கொயர் நிறுவனத்தில் தொடர்ந்து 6 நாள் வருமான வரி சோதனை நடக்கிறது என்றால் அந்தளவிற்கு தரவுகள் கிடைத்துள்ளது என்று அர்த்தம். G ஸ்கோயர் சோதனையில், உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பை நான் 2 ஆயிரம் கோடி என குறைவாக வெளியிட்டு விட்டதாக அவர் வருத்தத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேன். இளவரசனான அவருக்கு 20 ஆயிரம் கோடி என்று சொத்து மதிப்பை சொல்லியிருக்க வேண்டும்.
உதயநிதியின் சொத்து மதிப்பு 2 ஆயிரம் கோடி என்ற என் கருத்து ஏற்புடையதில்லை என்றால் அதை எந்த தொலைக்காட்சயிலும் காட்ட வேண்டாம். தொலைக்காட்சிகள் தங்களது டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக் கொள்ள என் செய்தியாளர் சந்திப்புக்கு வருகின்றீர்கள். வரும் செய்தியை அனுப்புவதுதான் செய்தியாளர்களின் வேலை , செய்தியை போடாலாமா வேண்டாமா என்பது எடிட்டரின் வேலை. செய்தியாளர்கள் இன்டர் மீடியட் மட்டும்தான் என்று கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா











