திருமண விருந்தில் நடந்த சோகம் : சூடான ரசத்தில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சேர்த்த கல்லூரி மாணவர் திருமண மண்டபத்தில் உணவு பரிமாற சென்றபோது ரசத்தில் தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம்…

அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சேர்த்த கல்லூரி மாணவர் திருமண மண்டபத்தில்
உணவு பரிமாற சென்றபோது ரசத்தில் தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரில் வேணு மற்றும்
கவிதா தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

இவர்களின் மூத்த மகன் சதீஷ் குமார். இவருக்கு  வயது 21. இவர் ஒரு கல்லூரியில் BCA படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் மீஞ்சூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு கடந்த 23ஆம் தேதி உணவு பரிமாறும் கேட்டரிங் சர்வீஸ் வேலைக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது சமையலறையிலிருந்து  உணவு பாத்திரத்தை இழுத்துக் கொண்டு வந்த சதீஷ் அவரின் பின்னால் அடுப்பிலிருந்து இறக்கப்பட்டு சூடான நிலையில் வைக்கப்பட்ட  ரசம் இருந்த சட்டியில்  தெரியாமல் தவறி விழுந்துள்ளார்.

இதனால் பலத்த காயம் அடைந்த சதீஷை மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சதீஷ்
உயிர் இழந்துள்ளார். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.